பெரும் புலவர் து.சு. கந்தசாமி முதலியார் (14.04.1892 – 27.06.1954)
திருமதி சுப்பம்மை, திரு சுப்பிரமணிய முதலியார் இணையருக்கு 14-04- 1892 அன்று கந்தசாமியார் ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்தார். மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரியில் கலையியல் பயின்று 1917இல் பட்டம் பெற்றார். சிவகாசி உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
1919 சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். அதன்பின் முதுகலை பயின்றார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சிக் குழுவின் பார்வையாளராகத் தொண்டாற்றினார். சிவஞான போதம், திருக்குறள் ஆகிய இரண்டிலும் ஆய்வு மேற்கொண்டார். இவற்றை ஆங்கில நூல்களோடு ஒப்புநோக்கி உண்மையை தேடினார். திருக்குறள்போல மெய்கண்டாரின் சிவஞான போதமும் உலகப் பொதுநூல் என்றார். திருக்குறள் முப்பொருள்போல சிவஞான போதமும் முப்பொருள் உண்மை பேசுகிறது என்றார். இவர் உலகம் போற்றத்தக்க வகையில் தத்துவப் பேராசிரியராகப் திகழ்ந்த பெருந்தகை ஆவார்.
மேனாட்டாருக்குத் திருக்குறள், சிவஞானபோதம் இரண்டையும் அறிமுகப்படுத்தி வைத்தார். திருப்பனந்தாள் திருமடத் திருமுறை தலைவரால் காசிப் பல்கலைக்கழகத்தில் சித்தாந்த வகுப்பைத் தொடர்ந்து எடுக்க தமிழகத்திலிருந்து நியமிக்கப்பட்டார். தமிழ், ஆங்கிலம், சித்தாந்தம் மூன்றையும் நுட்பமாக அறிந்து அவற்றை அங்கு கற்பிக்கவும் ஆங்கிலத்தில் வகுப்பு எடுத்ததோடு அவைகளை கட்டுரையாக்கி நூலாக்கவும் திட்டமிட்டார்.
நீதிக் கட்சியில் உறுப்பினராக இருந்தார். கூட்டுறவு பொருள்கூடம், வங்கி, சந்தைச் சங்கங்கள் நிறுவி உழைத்தார். சாத்தூர் நகராட்சித் தலைவராக இருமுறை சிறப்பாகச் செயல்பட்டார். தமிழ்ச்சங்கம் ஒன்றையும் நிறுவினார். 1948இல் சைவ சித்தாந்த மகா சமாஜம் தலைவராகச் செயல்பட்டார். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக இயக்குனர் குழுவில் உறுப்பினராக இருந்து பணியாற்றினார். இதன் ஆசிரியர் குழுவிலும் செயல்பட்டுவந்தார். தென்னிந்திய சைவ சித்தாந்த சங்கத்தின் சார்பில் 27-04-1952 முதல் 20-05-1952 வரை இருபத்தி நான்கு நாட்கள் திருமடத்தில் நடந்த சித்தாந்த வகுப்பின் பேராசிரியராகப் பணியாற்றினார்.
திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் வெளியிட்டுள்ள திருக்குறள் பரிமேலழகர் உரை நூலுக்கு, முதற்பதிப்பு முன்னுரையை டி.எஸ்.கந்தசாமி முதலியார் அவர்கள் எழுதியுள்ளார்.
டி.எஸ்.கந்தசாமி முதலியார் அவர்களைப் பற்றி திரு.வி.க. அவர்கள் சாத்தூருக்குச் சமயச் சொற்பொழிவாற்றச் சென்றிருந்தபோது பின்வருமாறு பாராட்டி உரைத்துள்ளார். (திரு.வி.க.வாழ்க்கைக் குறிப்புகள், பக்.246)
சுமார் 4.15 மணிக்கு திரு.தி.பொ.மீனாட்சி சுந்தரம் அவர்கள் வந்து தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டதும், பெரும் புலவர் திரு. டி.எஸ்.கந்தசாமி முதலியார் அவர்கள் அறப்பாலில் கூறப்பட்டுள்ள பாக்களில் பலவற்றை ஓதி, வள்ளுவர் பெருமை தெற்றென விளங்கும்படி அவற்றில் புதைந்து கிடக்கும் பா நயத்தையும், பொருட் செறிவையும் எடுத்துக்கூறி வள்ளுவர் கூறியுள்ள சிறப்பான பண்புகளைக் கடைப்பிடித்து நடந்துவருவதன் மூலமே எவனும் முன்னேற்றம் அடைதல் கூடும் என்பதை நன்கு விளக்கிக் காட்டியும், தலைவருள் தலைவனும் புலவருள் புலவனும் ஆன வள்ளுவர் தமிழ்க்கலையுள்ள ஓர் ஒப்பற்ற கலையாக திருக்குறளை இயற்றிக் கொடுத்துள்ளமையை வாழ்த்திப் பாராட்டிக் கூறி, அன்னாரின் திருக்குறளை யாவரும் மாசறக் கற்றல் வேண்டும். அதன்படி நடத்தலும் வேண்டும் என்று கூறி திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார்கள்.
பி.ஏ., எம்.ஏ., ஆங்கிலம், தமிழ் பட்டங்களைப் பெற்றவர். பேச்சு, கவிதை, எழுத்து, கற்பித்தல், உணர்த்தல் இவற்றில் தேர்ந்த 60 மாணவர்களுக்குக் கற்பித்ததால் பாராட்டு, பரிசு, விருது எனத் திருமடங்களும் மாணவர்களும் இவருக்குச் சிறப்பு சேர்த்தனர். இலங்கை யாழ்ப்பாணம் சென்று விரிவுரை நிகழ்த்தியுள்ளார். 27-06-1954 அன்று உடல்நலக்குறைவால் பகல் 12.30 மணி அளவில் இயற்கை எய்தினார்.