Skip to content

புலவர் குழந்தை

புலவர் குழந்தை (01.07.1906 – 25.09.1972)

ஈரோடு மாவட்டம் ஓலவலசு எனும் ஊரில் பிறந்தவர். முத்துசாமிக் கவுண்டர் சின்னம்மை இணையருக்கு மகனாகப் பிறந்தவர். உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக 38 ஆண்டுகள் பணியாற்றியவர். கவிதை பாடுவதில் வல்லவர். கம்பர் இராமாயணம் பாடியதைப் போல இவர் இராவண காவியம் (1946) பாடினார். இந்நூலுக்கு 1948இல் தடைவிதிக்கப்பட்டது.  டாக்டர் கலைஞர் அரசால் 1971ஆம் ஆண்டு தடை நீக்கப்பட்டது. இந்நூல் அக்காலத்தில் மேடைகளில் பரவலாகப் பேசப்பட்டது.

யாப்பிலக்கணத்தில் மிகுபுலமையாளர். யாப்பதிகாரம், தொடையதிகாரம், இன்னூல் (நன்னூல் போல இலக்கணநூல்) என இலக்கண நூல்களை எழுதினார். நெருஞ்சிப்பழம், காமஞ்சரி, திருநணாச் சிலேடை வெண்பா, அரசியலரங்கம், புலவர் குழந்தை பாடல்கள் எனப் பல கவிதை நூல்களை இயற்றினார்.

கொங்குநாடும் தமிழும், கொங்குநாடு, கொங்குகுல மணிகள், தமிழக வரலாறு, தீரன்சின்னமலை வரலாறு முதலான வரலாற்று நூல்களை எழுதினார். தொல்காப்பியம் பொருளதிகாரம் உரை, திருக்குறள் உரை, நீதிநூல்களுக்கு உரை என உரையாசிரியராகவும் திகழ்ந்தார். திருக்குறளும் பரிமேலழகரும் எனும் ஆராய்ச்சி நூலையும் எழுதினார்.

வாழ்நாள் முழுமையும் பகுத்தறிவாளராக, தன்மான இயக்கப் புலவராக வாழ்ந்தார். 34 நூல்களைப் படைத்த தமிழறிஞர் இவர். புரட்சிப் பாவலராக விளங்கிய இவர், திராவிடப் பெருங்காப்பியம் என்ற பெயரில் எழுத முனைந்தார். எழுதி முடிக்கும் முன்பே மறைந்தார். இவர் எழுதியதொல்காப்பியர் காலத் தமிழர்என்ற நூல் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு நல்விருந்தாக இருந்தது. தந்தை பெரியார் நெறியில் கடைசிவரை நின்றவர்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995