Skip to content

புலவர் என்.வி.இராமலிங்கம்

புலவர் என்.வி.இராமலிங்கம் (27.04.1931 – 23.02.2022)

புலவர் என்.வி.இராமலிங்கம் அவர்கள் 27.04.1931 அன்று பிறந்தார். இவர் செங்கை நந்திவரம் கிராமத்தில், திருவாசகச் செம்மல் வே. ஏழுமலைபாப்பாத்தி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர். பச்சையப்பன் கல்லூரியில் பி.காம். பட்டம் பெற்றுப் பின்னர் புலவர் பட்டமும், பி.லிட். எம்.. பட்டமும் பெற்றார்.

புலவர் என்.. இராமலிங்கம் அவர்கள் தென்னக இரயில்வே தலைமை அலுவலகத்தில் வாரந்தோறும் திருக்குறள் வகுப்புகள் 7 ஆண்டுகளும், சிலப்பதிகார வகுப்புகள் 2 ஆண்டுகளும், தொடர்ந்து திருநின்றவூரில் 2 ஆண்டுகளும் ஆதம்பாக்கத்தில் 5 ஆண்டுகளும் நாம் வசிக்கும் இலாயிட்சு அவென்யூவில் 2 ஆண்டுகளும் மற்றும் சென்னையில் சில இடங்களிலும் திருக்குறள் தொடர் வகுப்புகளும் சொற்பொழிவுகளும் நிகழ்ந்தியவர்; இவர் ஆதம்பாக்கம் திருவள்ளுவர் கழகத்தின் நிறுவனர் ஆவார்.

திருக்குறள் வகுப்புகள் வாயிலாகப் பண்டைத் தமிழர்களின் அறநெறிக் கோட்பாடுகள், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றையும் விளக்கும் பாங்கு போற்றுதற்குரியது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அழகான தட்டச்சு மற்றும் புறத்தோற்றத்தோடு வெளியிட்டார்.

பணியிலிருந்து ஓய்வு பெற்று இதுகாறும் இவர் படைத்துள்ள நூல்கள் 30. திருக்குறள் தொடர்பான நூல்கள்: 10, புறநாநூறு:1. வரலாற்று அடிப்படையில்: 4, கவிதை 2, பயண நூல்:1.  இவற்றில் தமிழக அரசு பரிசு பெற்றவை 4 நூல்கள் ஆகும். அவ்வப்போது திருக்குறள் தொடர்பான 9 சிறு வெளியீடுகளை வழங்கியுள்ளார். திருக்குறள் தொடர்பாக இருபத்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

பல அமைப்புகள் விருதுகளும் பட்டங்களும் வழங்கிப் புலவரைச் சிறப்பித்துள்ளன. வி.ஜி.பி. நிறுவனம் சிறந்த எழுத்தாளருக்கான பாராட்டும் பரிசும் வழங்கியுள்ளது. இடையறாது தமிழ்ப் பணிபுரிந்த புலவர் N.E. இராமலிங்கம் அவர்கள் தமது 91ஆவது அகவயில் 23-02-2022 அன்று இறையருளில் ஒன்றினார். ஓயாது தமிழ்ப் பணி புரிந்தவர் ஓய்வு பெற்றார். இவர் பணியில் இருக்கும்போது, அஞ்சல்வழிக் கல்வி நிறுவனத்தின் வழியாகத் தமிழ் முதுகலையினை என்னிடத்தில் பயின்றார். என்மீது பேரன்பும் பெருமதிப்பும் உடையவர். என்னை எங்கே கண்டாலும் எழுந்துநின்று வணங்கி, அன்புபாராட்டுவார். ஆசிரியர் மாணவர் உறவில் 91 வயது வரை மாணவர் என்ற நிலையிலேயே என்னிடம் பழகியவர். ஆசிரியர் மாணவர் உறவுக்கு இவர் ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். ஒரு மிகச் சிறந்த மாணவத் தமிழறிஞரை இழந்தது என்னை வருத்துகிறது. 10-04-2022 ஞாயிறு அன்று சென்னை இராயப்பேட்டை IOA கட்டடத்தில் இவர் நினைவைப் போற்றும் நிகழ்வு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு அவருடனான என்னுடைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டேன்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995