புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் (29.04.1891 – 21.04.1964)
புதுச்சேரியில் பிறந்து தமிழாசிரியராகச் சிறந்து கவிஞராக உயர்ந்தவர். பாரதிதாசன் கவிதைகள் நான்கு தொகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ளன. பாண்டியன் பரிசு, எதிர்பாராத முத்தம், சேரதாண்டவம், அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு, குறிஞ்சித் திட்டு, புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா, காதல் நினைவுகள், கழைக் கூத்தியின் காதல், அமைதி, இளைஞர் இலக்கியம், இசையமுது, நல்ல தீர்ப்பு, இருண்ட வீடு, தமிழியக்கம், பாரதிதாசன் நாடகங்கள், குறள் உரை என இவர் படைத்த படைப்பிலக்கியங்கள் ஏராளம்.
“தமிழுக்கு அமுதென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”
என்ற பாடல் உலகத் தமிழர்களின் உள்ளங்களில் நிறைந்த பாடல்.
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு”
போன்ற வைர வரிகளைப் பாடிய சுயமரியாதைக் கவிஞர் இவர்.
மகாகவி பாரதியாரோடு நெருக்கமாக இருந்தவர். அவர் தொடர்பால் ‘பாரதிதாசன்’ என பெயரை மாற்றிக்கொண்டார். ஸ்ரீசுப்பிரமணிய பாரதியாரின் கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனகசுப்புரத்தினம் எனப் பாரதியாரால் குறிக்கப் பெற்றவர்.
புதுவையிலிருந்து வெளியான இதழ்களில் கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன் எனப் பல புனைபெயர்களில் எழுதினார். குயில் என்ற இதழை நடத்தினார். தந்தை பெரியாரின் கொள்கையர். சுயமரியாதைக்காரர். திராவிட இயக்கத்தில் தீவிர பற்றுக் கொண்டிருந்தார். அதன் காரணமாகக் கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத மறுப்பு போன்றவற்றினைத் தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.
கவிஞராகவும் எழுத்தாளராகவும் திரைப்பட கதாசிரியராகவும் விளங்கிய பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் பிசிராந்தையார் நாடக நூலுக்கு 1969 இல் சாகித்திய அகாதமி விருது கிடைத்தது. இவரது படைப்புகள் 1990ஆம் ஆண்டு தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
சிறியதும் பெரியதுமாக 87 நூல்கள் இவரால் வெளியிடப் பெற்றன. பத்துத் திரைப்படங்களுக்குத் திரைக்கதை உரையாடல் எழுதியுள்ளார். 33 திரைப்படங்களுக்குப் பாடல் எழுதியுள்ளார்.
புரட்சிக் கவிஞராய் ஒளிர்ந்த இவரது கவிதைகளில் நகைச்சுவையும் இழையோடியது. ‘பாரதிதாசன் படைப்புகளில் நகைச்சுவை’ (1976 – 1977) என்ற தலைப்பில் யான் செய்த எம்.ஃபில்., பட்ட ஆய்வு நூலாக வெளிவந்து பல பதிப்புகளைக் கண்டுள்ளது.