Skip to content

நீதியரசர் அரங்க. மகாதேவன்

நீதியரசர் அரங்க. மகாதேவன் (10.06.1963)

திருமதி. கிருஷ்ணம்மாள், திரு. மா. அரங்கநாதன் இணையரின் மகனாக 10.06.1963 ஆம் நாளன்று சென்னையில் பிறந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பட்டம் பெற்றவர். சென்னைச் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தவர். பள்ளி, கல்லூரி நாட்களில் கலை இலக்கியம் ஆகியவற்றின்பால் மிக ஈடுபாடு கொண்டார். அது தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்று அக்கலைகளின் நுட்பம் அறிந்தார். பல்வேறு அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர். தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவான பிறகு மறைமுக வரிகள் மற்றும் மத்திய கலால் விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றார். சிவில், கிரிமினல் மற்றும் ரிட் வழக்குகளில் சட்ட தொழிலைத் தொடர்ந்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் கூடுதல் அரசு வழக்கறிஞராகவும் இந்திய அரசின் மூத்தநிலை வழக்கறிஞராகவும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை நடத்தி உள்ளார்.

2003 அக்டோபர் 25 முதல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சமத்துவம், பெண்களுக்கு அதிகாரம், கருத்து, பேச்சு சுதந்திரம், மூன்றாம் பாலின உரிமைகள் இயற்கை விவசாய நிலங்கள், கோயில்கள், கலைச்செல்வங்கள் பாதுகாப்பு, சிலை மீட்பு இவற்றோடு திருக்குறளைப் பாடத்திட்டத்தில் சேர்த்தல் முதலான வழக்குகளில் இன்றியமையாத தீர்ப்புகளை வழங்கி மேற்கண்டவற்றைப் பாதுகாத்தார்.

சமய, அற, சமுதாய இலக்கியங்களில் மிக்க ஈடுபாடு கொண்டு நுட்பமாகப் படித்ததோடு தெளிவாகப் பேசும் திறம் பொருந்தியவராக விளங்குபவர். சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், இக்கால இலக்கியம் என அனைத்து இலக்கியங்களையும் ஆழ்ந்து பேசும் மதிநுட்பம் உடையவர். இவர் தந்தையார் மிகச்சிறந்த படைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருக்குறளைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பாடமாக வைக்க வேண்டும் என்னும் மனுதாரரின் கோரிக்கையை ஏற்று அதனை நடைமுறைப்படுத்த தமிழக அரசிற்கு உத்தரவிட்டவர். இன்று பள்ளிப் பாடப்புத்தகங்களில் ஒவ்வொரு வகுப்பிற்கும் பதினைந்து அதிகாரங்கள் வீதம் 105 அதிகாரங்கள் 1050 குறட்பாக்கள் பாடமாக வைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. (அரசாணை எண் 51, நாள் : 21.03.2017) சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், இக்கால இலக்கியம் வரை ஆழங்கால்பட்ட தமிழறிஞர் நீதியரசராக நமக்குக் கிடைத்திருப்பது நாம் செய்த தவப்பயனாகும்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995