நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி (13.08.1971)
திருமதி சியாமளா திரு. சொன்னப்பன் இணையரின் மகனாக 13.08-1971 அன்று கும்பகோணத்தில் பிறந்தவர். பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளைக் கும்பகோணத்தில் மேற்கொண்டவர். தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றபின் சென்னைச் சட்டக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்று வழக்கறிஞர் ஆனார். சட்டத்தில் அரசியலமைப்பு, பன்னாட்டுச் சட்டங்கள், ஒப்பந்தச் சட்டம் இவற்றில் முதுநிலை சட்டம் முடித்தார்.
குற்றச் செயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி, சட்டப் பாதுகாப்பு உரிமை குறித்து முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுள்ளார். சட்டவியல் தொடர்புடைய இலக்கியக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். இன்றும் எழுதி வருகிறார். புதிய நோக்கில் புரட்சிக்கவிஞர் என்ற நூல் நெல்லைத் தனித் தமிழ் இலக்கியக்கழகத்தின் பரிசு பெற்றது. அது ஆய்வுக் கட்டுரைகளில் ஒன்றாக விளங்கியது.
இந்திய சட்டவியல், பண்டைத் தமிழர் நீதி வழங்கும் முறை, தண்டனைக் கோட்பாடுகள், இலக்கியங்கள் வழி அறிய பெரும் முறை, மன்றங்கள் வழக்காடும் முறைகள் குறித்த ஆய்வுகளில் ஆர்வம்கொண்ட இவர், மாவட்ட நீதிபதியாக விளங்குகிறார். இவர் ‘குறள் மலர்கள்’ என்ற தொகுப்பை எழுதிவருகிறார். அவ்வகையில் திருக்குறளில் வரும் மலர்நீட்டம் என்ற தொடர் குறித்து மலருக்கேது நீட்டம்?… என்பது போன்ற கட்டுரைகள் எழுதி வருவது குறிப்பிடத்தக்கது.