நாவலர் சோமசுந்தர பாரதியார் (27.07.1879 – 14.12.1959)
சுப்பிரமணியம் என்கிற எட்டப்பப்பிள்ளை முத்தம்மாளுக்கு மகனாகப் பிறந்தவர். மகாகவி பாரதியாரின் இளமைக் காலத் தோழர். சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகளிடம் பயின்று தூத்துக்குடியில் வழக்கறிஞராக பணியைத் தொடங்கியவர்.
அஞ்சா நெஞ்சர், தற்கால நக்கீரர், நற்றமிழ்ச் செங்குட்டுவர் எனப் போற்றப் பெற்றவர். நாட்டுத் தொண்டிலும் தமிழ்த் தொண்டிலும் ஈடுபட்டவர். மிகச்சிறந்த நாவலர் வ.உ.சி.யுடன் விடுதலைப் போராட்டத்தில் குடும்பத்துடன் பங்கேற்றவர்.
தொல்காப்பியம். திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் நான்கிலும் ஆழங்கால்பட்டவர். வஞ்சிக் காண்டம் இளங்கோ இயற்றியது அன்று என நிறுவியவர். பொய்மை சூழ்ந்த திருவள்ளுவர் வரலாற்றை உண்மை கண்டு எழுதியவர்.
தசரதன் குறையும் கைகேயி நிறையும், திருவள்ளுவர், நற்றமிழ் ஆராய்ச்சிகள், மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி: ஒரு செய்யுட் கதை (1947), மாரி வாயில் (1936) செய்யுள் நூல்கள், சேரர் தாயமுறை, சேரர் பேரூர், தூது இலக்கியம் எனப் பத்து நூல்கள் படைத்தவர். 1937இல் இந்தித் திணிப்பைக் கடுமையாக எதிர்த்தவர். இவரது பெரும் புலமையைக் கண்டு அண்ணாமலை அரசர் இவரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக்கினார். 1975இல் வெள்ளி விழாவின் போது இவருக்கு டாக்டர் பட்டம் அளித்துச் சிறப்பித்தார். கணக்காயர் (1941), நாவலர் (1944) என்ற பட்டங்களை அளித்துத் தமிழ் அமைப்புகள் போற்றின. 27.07.1979 இல் தமிழக அரசு இத்தமிழறிஞருக்கு நூற்றாண்டு விழா எடுத்துப் போற்றியது.
அன்னைத் தமிழுக்கும் தாய்நாட்டின் விடுதலைக்கும் தமிழரின் மேன்மைக்கும் குரல் கொடுத்த அஞ்சா நெஞ்சர்.