Skip to content

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (19.10.1888 – 24.08.1972)

வெங்கடராமபிள்ளை, அம்மணி அம்மாள் இணையரின் மகனாகப் பிறந்தார். திருச்சி, கோவையில் கல்வி கற்றார். சிறந்த ஓவியக் கவிஞர். 1911 இல் பா. வே. மாணிக்க நாயக்கருடன் தில்லி தர்பாருக்குச் சென்று 5 ஆம் ஜார்ஜ் மன்னரிடம் தங்கப் பதக்கம் பெற்றார்.

1920 இல் கல்கத்தா காங்கிரசு மாநாட்டிற்குச் சென்று காந்தியடிகளைக் கண்டு அவரது பக்தரானார். அக்காலத்தில் நாமக்கல், கரூர் பகுதிகளில் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக வலம் வந்தார்.

கவிஞராகவும் ஓவியராகவும் ஒளிர்ந்த இவர் காந்தியடிகளின் தண்டி வழிநடையின்போதுகத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்என்று எழுதிய புகழ்மிகு பாட்டே இவரைத் தமிழகத்திற்குத்தேசியக்கவிஞர்என அடையாளம் காட்டியது. பாரதியார் இல்லாத குறையை இவர் நீக்கிவிட்டார் என மூதறிஞர் இராஜாஜி இவரைப் புகழ்ந்தார். 1924 இல் சென்னை காங்கிரஸ் மகாசபையின் போது தங்கப் பதக்கம் பெற்றுக்காங்கிரஸ் புலவன்எனப் போற்றப் பெற்றார்.

மகாகவி பாரதியாரைச் சந்தித்தபோது அவர் முன் இவர் பாடிய பாடலைக் கேட்டுப் பாரதியார்பலே பாண்டியா! பிள்ளை நீர் ஒரு புலவர், ஐயமில்லைஎனத் தட்டிக் கொடுத்தார்.

இவரது கவிதைகள் எளிமையானவை. இனிமையானவை. இவருக்கு நிறைந்த புகழை ஈட்டித் தந்ததுஅவனும் அவளும்என்ற காவியமும்மலைக்கள்ளன்என்ற புதினமுமாகும். இவரது மலைக்கள்ளன் கதை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளில் திரைப்படமாக எடுக்கப் பெற்றது. இந்திய அரசின் முதல் வெள்ளிப் பதக்கம் பெற்ற தமிழ்ப்படம் இதுவாகும்.

இலக்கிய இன்பம், தமிழன் இதயம், என்கதை, சங்கொலி, தமிழ்த்தேர், பிரார்த்தனை, தாயார் கொடுத்த தனம், தேமதுரத் தமிழோசை, இசைத்தமிழ், திருக்குறளுக்கு உரை என நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியவர்.

1949இல் அரசவைக் கவிஞரானார். ஒன்றிய அரசின் பத்மபூசன் விருதினைப் பெற்றார். ஒன்றிய அரசு இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995