Skip to content

திரு. ப. தங்கராசு,கரூர்

தெள்ளியரான திருவுடையாரில் இவர் ஒருவர். கரூரில் பி.டி. கோச் தங்கராசு என்றால் தெரியாதவர்களே இருக்க முடியாது. உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்று சிலரைத் தான் சொல்ல முடியும். ஏன் அவ்வளவு உறுதியாகக் கூறுகின்றேன் என்றால் கரூர் மாநாட்டிற்காக நண்பர் குறளகனோடு மாற்றும் சதாசிவத்தோடு சென்ற போது, கூர்மையான அறிவோடு சில கேள்விகளை முன் வைத்தார்.

திருக்குறள் இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக் கொள்கிறீர்களே? உங்களை யார் எப்போது தேர்வு செய்தார்கள். இந்தக் கூட்டியக்கத்திற்கு என்ன விதிமுறைகள்? உறுப்பினர்கள் யார் யார்? வரவு செலவு என்ன? என இப்படி பல கேள்விகளை முன் வைத்தார். நானும் என் முயற்சிகள் முளையிலேயே உள்ளன. தமிழ்நாடு முழுவதும் 4 மண்டல மாநாடுகளை நடத்தி ஐந்தாவதாக மாநில மாநாட்டை சென்னையில் நடத்தும்போது தேவைக்கும் நடைமுறைக்கும் ஏற்ப விதிமுறைகளை வகுப்போம். உறுதியாக என் போன்ற எண்ணம் உடையவர்களைத் தேடுவதே இந்த மாநாடுகளின் நோக்கம் என்றேன். அதனை முழுமனதோடு ஏற்று மூன்றாவது மேற்கு மண்டல மாநாடு கரூரில் நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பும் கொடுத்தார்.

தொடர்ந்து பல ஆலோசனைகளை வழங்கி தானும் தன் பங்காக வ.செ. குழந்தைசாமியின் படைப்புகளில் இருந்து  தேர்ந்தெடுக்கப்பட்ட 365 கருத்தோவியங்களை பேரா. மோகன் தொகுத்திருந்த நூல்கள் 100 நன்கொடையாக கொடுத்ததார் . அதன் மதிப்பு ரூ.10,000/- .

மேலும் கரூரை மையமாக வைத்து திருக்குறள் அமைப்புகளை நான் கூறியவாறு கூட்டமைப்பு என்றில்லாமல் அதே நேரத்தில் ஒருங்கிணைந்த செயல்பாடுகளோடு ‘திருக்குறள் பேராயம்’ என்ற அமைப்பை உருவாக்க வழிமுறைகளும் தந்தார். கரூர் செங்குட்டுவனும், பி.டி. ஐயாவும் இருந்து நடத்தும் எந்த கூட்டங்களிலும் எனது கருத்துக்கு ஏற்பு வழங்கி திருத்தங்கள் செய்து அறிவிப்பார்.

இப்படி எல்லா வகையான தெளிந்த சிந்தனையும் திருநிறைந்த வாழ்வும் கொண்ட ஐயாவை தொண்டராக இணைப்பது   இத்தொகை நூலுக்கே சிறப்பு சேர்க்கும் என நம்புகிறேன்.

நன்றி

தொகுப்பு சி . பன்னீர்செல்வம்

மாவட்டக் கல்வி அதிகாரி (பணிநிறைவு

திருவள்ளுவர் ஞான மன்றம்

ஜெயங்கொண்டம்