திரு. பழ. நெடுமாறன் (10.03.1933)
அய்யா பழ. நெடுமாறன் அவர்கள் சைவத்திரு கி.பழநியப்பனார் – பிரமு அம்மையாருக்கு மகனாக 10.03.1933ஆம் நாளன்று மகனாகப் பிறந்தார். அவரது தந்தை மதுரைத் தமிழ்ச்சங்கச் செயலாளராகவும், மதுரை திருவள்ளுவர் கழக நிறுவனராகவும் தொண்டாற்றினார்.
1942ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற முத்தமிழ் மாநாடு, 1948 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தமிழ்த்திருநாள், 1956ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கப் பொன்விழா போன்ற மாபெரும் தமிழ் மாநாடுகளைச் சிறப்புற நடத்திய பெருமை அவரது தந்தையாருக்கு உரியது. அய்யா பழ. நெடுமாறனுக்கு இரண்டு தமக்கைகளும், மூன்று தம்பிகளும் உள்ளனர். இவரது வாழ்க்கைத்துணைவி திருமதி பார்வதி அம்மையார்.
மதுரை புனித சூசையப்பர் உயர்நிலைப்பள்ளி, புனித மரியன்னை உயர் நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில், பள்ளிப்படிப்பினை முடித்த அய்யா பழ. நெடுமாறன் அவர்கள் தனது கல்லூரிப்படிப்பினை அமெரிக்கன் கல்லூரி, தியாகராசர் கல்லூரி (இடைநிலை வகுப்பு), அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படித்துத் தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றார். அவரது ஆசிரியர்களாகப் புகழ் பெற்ற முனைவர் அ. சிதம்பரநாதனார், முனைவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், முனைவர் இராசமாணிக்கனார், அவ்வை சு. துரைசாமி பிள்ளை, திரு. அ. கி. பரந்தாமனார் ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பழ. நெடுமாறன், மாணவப் பருவத்திலேயே பொது வாழ்வில் ஈடுபட்டார். அவர்தம் கல்லூரி வாழ்வில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் உரிமைப் போராட்டத்தில் பங்கெடுத்து, 1958ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். அதே ஆண்டில், அறிவியல் மாணவர் இல்லப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1958-1959 வரை பதவி வகித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட அண்ணாதுரையை மாபெரும் போராட்டத்திற்குப் பிறகு அழைத்து வந்து திருவள்ளுவர் விழா நடத்தினார். மேலும், அறிஞர் அண்ணாவின் ஓம்லாண்ட் பத்திரிகை நிதிக்காக மாணவர்கள் சார்பில் எஸ்.டி.சோமசுந்தரத்துடன் இணைந்து ரூ.10,000 பணம் திரட்டி அளித்தார்.
இவர் ஒரு தமிழ்த் தேசியவாதி. தொடக்க காலத்தில் மகாத்மா காந்தி, காமராசர் மீது கொண்ட பற்றால் இந்திய தேசியக் காங்கிரசு இயக்கத்தில் பணியாற்றினார். இந்திரா காந்தி மதுரையில் தாக்கப்பட்டபோது அவரை உயிருடன் மீட்டார். அதனால் இந்திரா காந்தியால் ‘என் மகன்’ என்று அன்புடன் அழைக்கப்பட்டார். காமராசர், நெடுமாறனின் துணிச்சலையும் குணத்தையும் பார்த்துவிட்டு ‘மாவீரன்’ என்று பெயர் சூட்டினார். இவர் கருத்து வேறுபாடுகளால் காங்கிரசைவிட்டு வெளியேறிவர். பின்பு, காமராசர் காங்கிரசு இயக்கத்தைத் தோற்றுவித்தார். பின்னர், ஈழப் பிரச்சனையில் முழுமையாக ஈடுபட்டுத் தமிழர்களின் நலன் கருதி தமிழர் தேசிய இயக்கத்தைத் தொடங்கினார். தேர்தல் அரசியலில் இறங்காமல் தமிழ் மக்களுக்கான போராட்டங்களை மட்டும் முன்னிறுத்தும் போராட்ட அரசியல் வழி செயல்பட்டு வருகிறார்.
இவர் பல்வேறு அமைப்புகளைத் தோற்றுவித்தும், சில அமைப்புகளில் இணைந்தும் பொதுப்பணிகளைச் செய்தவர். முதல் உலகத் தமிழர் பேரமைப்பின் நிறுவனத் தலைவர், தமிழ்நாடு நாளிதழ் துணை ஆசிரியர், குறிஞ்சி வார இதழ், செய்தி நாளிதழ் ஆகியவற்றின் ஆசிரியர், 1997 முதல் தற்போது வரை ‘தென்செய்தி’ இதழின் ஆசிரியர் என இவர்தம் பணி மிகநீண்டது.
நேதாஜி எங்கே?, பெங்களுர் முதல் டில்லி வரை, காமராசருக்குக் கண்ணீர் கடிதங்கள், நீதி கேட்கிறோம்?, மனித குலமும் தமிழ்த் தேசியமும், தென்பாண்டிவீரன் (கவியரசு கண்ணதாசனின் தென்றல் இதழின் நெடுங்கதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது), சோழ குல வல்லி, அருவிக்கரை அழகி, முல்லை வனத்து மோகினி, சந்தன முல்லை, தமிழ் வளர்த்த மதுரை, தமிழ் உயர் தனிச் செம்மொழி, எழுக உலகத் தமிழினம், தமிழறிஞர் தெ.பொ.மீ–யின் அரசியல் தொண்டுகள், தமிழரும் கீதையும், கவியரசர் என் காவலர், பழந்தமிழர் பரவிய நாடுகள், பெருந்தலைவரின் நிழலில், உருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்து பாசிசமும், கவியரசர் என் காவலர், உரிமைகளை நிலை நிறுத்திய உன்னதத் தீர்ப்புகள் ஆகிய இவரது நூல்கள் சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களையும் எழுச்சியையும் வளர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. தொடர்ந்து நூல்கள் பல எழுதிக் கொண்டே வருகிறார். அண்மையில் இவர் வெளியிட்டுள்ள நூல் பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் (இரு தொகுதிகள்).
அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் என்னுடைய மாமா தமிழ்ப்பேராசிரியர் ச. சரவணன் அவர்களின் வகுப்புத் தோழர். அரசியலில் தூய்மையானவர். ஒழுக்கமானவர். என்றும் தூய வெண்மையான கதராடையே அணிபவர். இவர் ஆடையும் வெண்மை உள்ளமும் வெண்மை.