Skip to content

திருக்குறள் நூல் அறிவோம்

  • by

திருக்குறள் ஆய்வுத் தெளிவுரை
A4 வடிவம், கெட்டி அட்டை
1576 பக்கங்கள்

அறத்துப்பால் 1 தொகுதி
பொருட்பால் 2 தொகுதி
இன்பத்துப்பால் 1 தொகுதி

மொத்தம் 4 தொகுதிகள்

பேராசிரியர் சோ. ந. கந்தசாமி அவர்களின் முன்னுரையிலிருந்து சில பகுதிகள்.

திருக்குறள் செவ்வியல் தமிழில் உருப்பெற்ற ஒப்பற்ற உலகப் பெரு நூல் . சில்வகைச் சொற்களில் பல்வகைப் பொருளும் செறிவும் விரிவும் பொருந்தப் பாடப்பெற்ற அரும் படைப்பு . ஈராயிரம் ஆண்டுகளாக ஏட்டிலும் நாட்டிலும் வழங்கிவரும் தனிப்பெரும் பனுவல்.

இதனை உருவாக்கிய திருவள்ளுவர் தமிழகத்தில் தோன்றிய உலகப் பெரும் மேதை , உலகப் பேரறிஞர்களாகிய சாக்ரட்டிசு , பிளேட்டோ , அரிசுடாட்டில் , செனோ ( Zeno ) மார்கசு அரேலியசு முதலிய கிரேக்க , உரோம ஞானிகள் வரிசையிலும் சொராஸ்டர் , கன்பூசியசு , புத்தர்பிரான் , மோசசு , ஏசுபிரான் முதலிய மாபெரும் மனிதநேயச் சிந்தனையாளர் வரிசையிலும் ஒப்பவைத்து உவந்து பாராட்டத்தக்க உரவோராகத் திருவள்ளுவர் ஒளி வீசுகிறார் .

பல்துறைப் பேரறிவும் உலகியலறிவும் பழுத்த பட்டறிவும் நுண்மாண் நுழைபுலமும் மிக்க இப் பெருந்தகையார் , தனிமனிதனும் சமுதாயமும் நாடும் செம்மையும் செழுமையும் பெறுதல் வேண்டும் என்ற விழுமிய குறிக்கோளுடன் திருக்குறளை யாத்துள்ளார் .

தனிமனிதன் சீர்பெறும் பொழுதுதான் சமுதாயம் சீர்பெறும் ; சமுதாயம் சீர் பெறும் பொழுதுதான் நாடு சீர்பெறும் என்பது திருக்குறள் வழங்கும் செய்தியாகும் .

தனிமனிதன் , குடும்ப மனிதன் , சமுதாய மனிதன் , அரசியல் மாந்தன் , ஆன்மீக மாந்தன் என்றினைய மக்கட்குரிய ஒழுங்குகளையும் கடமைகளையும் தகவுகளையும் குறிப்பிட்ட தலைப்பின்கீழ் அளவை முறைப்படியும் அழகியல் உணர்வுடனும் பத்துப்பத்துக் குறள் வெண்பாக்களில் திட்ப நுட்பம் செறிந்த செஞ்சொற்களில் திருவள்ளுவர் பொதிந்து வைத்துள்ளபாங்கு எண்ணுந்தொறும் வியப்பும் நயப்பும் ஒருங்கே பயப்பதாகும் .

உலகம் தழுவிய ஒட்பம் கொண்டு இந்நூலை ஞாலப்பொதுமை தழைக்க ஆசிரியர் படைத்துள்ளார் .

இல்லறத்தார்க்கு அமைய வேண்டிய இயல்புகளையும் துறவறத்தார்க்குரிய தகைசால் தகவுகளையும் அறத்துப்பாலில் முப்பத்தெட்டு அதிகாரங்களில் வகுத்து வழங்கியுள்ளார் மன்பதைப் பாவலர் .

அரசியலில் பங்குபெறும் ஆட்சித்தலைவன் , அமைச்சன் , ஏனைய அரசியல் அலுவலர்கள் , குடிமக்கள் உள்ளிட்டோரின் பொறுப்புக்களையும் , செயல்களையும் எழுபது அதிகாரங்களில் பொருட்பாலில் விரிவாகவும் விளக்கமாகவும் வரையறுத்துக் கூறியுள்ளார் .

செவ்வியல் தமிழ்க்குச் சிறப்புரிமை உடைய அகத்திணை மரபுகளை வழுக்களைந்து வளமும் வனப்பும் திகழ , தலைவன் , தலைவி , தோழி என்ற அகமாந்தரை மையப்படுத்திக் களவியல் , கற்பியல் என்ற ஈரியல்களில் இருபத்தைந்து அதிகாரங்களில் இன்பத்துப் பாலினை எழில் கொழிக்கும் இனிய இலக்கியமாகப் படைத்துள்ளார் .

இப்பெருநூல் நெடுங்காலமாக ஆசிரியர் மாணவர் மரபில் திண்ணைப் பள்ளிகளிலும் வார்ப்பொது மன்றங்களிலும் பாடம் ஓதப்பெற்றுப்பயிலப் பெற்று வந்துள்ளது . இந்நூல் தோன்றிச் சற்றொப்ப ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளாக உரையின்றிப் பாடம் சொல்லப் பெற்று வந்த நிலை மாற்றம் பெற்று , மூல நூலை முழுமையாகப் புரிந்து கொள்ளுவதற்கு வேண்டிய உரைநூல்களின் தேவை ( commentaries as companions ) உணரப்பட்டது . அதன் விளைவாகத் தோன்றிய பதின்மர் உரைகளில் மணக்குடவர் , பரிப்பெருமாள் , பரிதியார் , காலிங்கர் என்பார் உரைகள் ஒருபாலாக , இறுதியில் எழுந்த பரிமேலழகரின் உரை மறுபாலாக ஓதப் பெற்று வந்துள்ளன .

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு பாடம் நடத்திய போதும் திருக்குறளில் ஆழ்ந்த பயிற்சியும் ஈடுபாடும் வாய்த்தமை குறிப்பிடத்தக்கது. திருக்குறள் கூறும் உறுதிப்பொருள் என்ற ஆய்வு நூலுக்கு தமிழ்நாடு அரசு 1982 ஆம் ஆண்டு முதல் பரிசு வழங்கிப் பாராட்டியது.

தொடர்ந்து திருக்குறள் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்ற வேட்கை என்னுள் எழுந்தது எனினும் பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் நிறுவனங்களிலும் பணிக்கப்பட்ட ஆய்வுப் பணிகளை உரிய காலத்தில் எழுதி ஒப்படைக்கும் பொறுப்பு இருந்ததால் அண்மையில்தான் முயற்சியை மேற்கொள்ளக் கூடிய சூழல் அமைந்தது. அதன் பயனாக திருக்குறள் அறத்துப்பால் ஆய்வு தெளிவுரை எழுதப்பெற்று மெய்யப்பன் பதிப்பகத்தால் டிசம்பர் 2017 சென்னையில் வெளியிடப்பட்டது.

இவ்வுரை நூலை உவந்து பாராட்டிய  அறிஞர் மக்கள் தொடர்ந்து பொருட்பால் இன்பத்துப்பால் ஆய்வு தெளிவுரை விரிவாக எழுதி வெளி வரவேண்டும் என்று விரும்பினர்.
அந்தப் பணி ஜூலை 2021ல் முழுமையாக நிறைவேறியது..

திருக்குறள் ஆய்வுத் தெளிவுரை
A4 வடிவம், கெட்டி அட்டை
1576 பக்கங்கள்

அறத்துப்பால் 1 தொகுதி
பொருட்பால் 2 தொகுதி
இன்பத்துப்பால் 1 தொகுதி

மொத்தம் 4 தொகுதிகள்

தொகுதி 1- 336 பக்கங்கள் ரூபாய் 300/-
தொகுதி 2- 416 பக்கங்கள்  ரூபாய் 500/-
தொகுதி 1- 432 பக்கங்கள் ரூபாய் 500/-
தொகுதி 1- 392 பக்கங்கள் ரூபாய் 500/-

மணிவாசகர் பதிப்பகம்
31, சிங்கர் தெரு,
பாரிமுனை,
சென்னை – 600 108,
தொலைபேசி எண்: 044-25361039