திருக்குறளார் வீ. முனுசாமி (26.09.1913 – 04.01.1994)
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தோப்பவாடி எனும் ஊரில் பிறந்தவர். தந்தையார் வீராசாமி. உடன் பிறந்தார் மூவர். விழுப்புரத்தில் தொடக்கக் கல்வி. திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியில் இளநிலைப் பட்டமும், சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல்., பட்டமும் பெற்றவர். மாணவப் பருவத்திலேயே 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்தவர். திருக்குறளைப் பரப்புவதையே தம் வாழ்நாளின் நோக்கமாகக் கொண்டு வாழ்ந்தவர். என் பணி திருக்குறள் தொண்டு ஒன்றுதான் என்று சூளுரைத்துப் பணியாற்றியவர்.
திருக்குறளுக்கு முதன்முதலில் குறள்மலர் என்ற வார ஏடு நடத்தியவர். திண்டிவனம் பாராளுமன்ற தொகுதியில் (1952-1957) போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்மூலம் இந்தியாவின் கவனத்திற்கு உரியவராக உயர்ந்தார்.
வள்ளுவனார் உள்ளம், வள்ளுவர் காட்டியவழி, அவர் சிரித்த சிரிப்பு, மானத்தை விற்காதே, வள்ளுவரைக் காணோம், திருக்குறளில் நகைச்சுவை, வள்ளுவர் வகுத்த வாழ்க்கைப் பாதை, வள்ளுவர்வழி பயணம், அகமும் முகமும், வள்ளுவர் உலகம், வள்ளுவரும் குறளும் எனத் திருக்குறள் தொடர்பாகவே 26 நூல்களை எழுதியவர்.
‘குறட்பயன்கொள்ள நம் திருக்குறள் முனிசாமி சொல்
கொள்வது போதுமே’
எனப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (1948) இவரைப் பாராட்டியுள்ளார்.
திருக்குறளார், தமிழ்மறைக் காவலர், திருக்குறள் கேசரி, முப்பால் வித்தகர், நகைச்சுவை இமயம், திருக்குறள் இரத்தினம் முதலான விருதுகளைப் பெற்றவர்.
1941இல் சேலத்தில் முதன்முதலில் திருக்குறள் மாநாட்டை நடத்தியவர். சிங்கப்பூர், மலேசியா முதலான அயல்நாடுகளில் தமிழ்மணத்தைப் பரப்பியவர். சிரிக்கவைத்து, சிந்திக்க வைக்கும் இயல்பினர், அனைவரையும் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கும் திறமையாளர், திருக்குறள் உரைவிளக்கம் எனும் பெயரில் அரிய நூலினை எழுதியவர். 1984-1994ஆம் ஆண்டுகளில் இவரோடு பயணித்துப் பட்டிமன்றங்கள் பலவற்றில் பேசியுள்ளேன். குழந்தை மனம் படைத்தவர். அன்பானவர். என் போன்ற இளைஞர்களையும் அரவணைத்துச் சென்றவர். திருக்குறளுக்காகவே வாழ்ந்தவர். திருக்குறளார் என அனைவராலும் போற்றப் பெற்றவர். வள்ளுவர் கோட்டத்தில் இயங்கிய தமிழக அரசின் திருக்குறள்நெறி பரப்பும் மையத்தின் இயக்குநராக இருந்து குறள் நெறியைப் பரப்பியவர்.