இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்றாஹீம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார்.நெடுநாட்களாக, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இவரின் இரண்டாவது மனைவி ஹாஜரா மூலம் ஓர் ஆண் மகவு பிறந்தது. இஸ்மாயீல் எனப் பெயரிடப்பட்ட அந்தக் குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள்.இஸ்மாயீல், பால்யப் பருவத்தை எட்டியிருந்த பொழுது, அவரைத் தனக்குப் பலியிடுமாறு, கடவுள், இப்ராஹிம் அவர்களுக்குக் கனவின் மூலம் கட்டளையிட்டார். இதைப்பற்றி இஸ்மாயீலிடம் கூறிய இப்ராஹிம், அவரின் அனுமதியுடன் பலியிடத் துணிந்தபொழுது, ஜிப்ரயீல் எனப்படும் வானவரை அனுப்பி, இறைவன் அதைத் தடுத்தார்.( நன்றி விக்கிப்பீடியா )
இந்த நிகழ்வு,சைவ சமயத்தின் சிறுதொண்ட நாயனார் வரலாற்றை நினைவுபடுத்தும் விதமாக இருக்கும்.
பெரியபுராணத்தில் வரும் நாயன்மார்களின் செயல்கள் பலவும் தியாகத்தின் உச்சம். நம்மால் நினைத்துக்கூட பார்க்க இயலாது
பெரிய புராணம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுந்தது அதில் வரும் நிகழ்வுகளோ பலநூறு ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகத்தான் இருக்கக்கூடும். சேக்கிழார் பெருமான் தான் கண்டு கேட்டவற்றை இறையருளால் காவியமாக வடித்து பெரிய புராணம் என்ற நூலாக வழங்கியுள்ளார்
வள்ளுவர் கூறுவார்
யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்
(அதிகாரம்:துறவு குறள் எண்:346)
மணக்குடவர் : யானென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை அறுக்குமவன், தேவர்க்கு மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும்.
யான் எனது என்பதை துறப்பது மிகவும் கடினமான செயல்
“எதையெடுத்தாலும், நான் செய்தேன் என்னால்தான் இது நடந்தது “என்றுதான் இன்று உலகம் செய்த வேலைக்கும், செய்யாத வேலைக்கும் சேர்த்து உரிமை கொண்டாடி வருகிறது.
இந்தப் பின்னணியில், “கடன் என்பது நல்லவை எல்லாம்” என்பதை பற்றி சான்றண்மை அதிகாரம் கூறுகிறது..
சான்றோர்களால் மட்டுமே அதாவது நற்குணங்களால் நிறைந்தவர்களால் மட்டுமே செயல்கள் அனைத்தையும் செவ்வனே செய்துவிட்டு, “என் கடன் பணி செய்து கிடப்பதே”
என்று இருக்க முடியும்
மற்றவர்கள் எல்லாம் விளம்பரப் பிரியர்கள், என்ற வகையிலே அடங்குவார்கள்
எனவே “நான்” என்பதை துறப்பது மிகவும் கடினமான செயல். அது நிறைவாக நடக்கும் செயல்
அதற்கு முன்னராக
“எனது” என்பதைத் துறக்க வேண்டும் என் வீடு.,என் வாசல் ,என் பொருள் ,என் மக்கள் என்பதை எல்லாம் துறந்து, உலகினர் அனைவரும் என் சுற்றத்தார் உறவினர்கள், “தாளாற்றி தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு” என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.. ஈகை ஒப்புரவு செய்து வாழ வேண்டும்.
முதலில் “எனது” நீங்கும் பிறகு “யான்” நீங்கும். பிறந்தவுடன் வருவது “நான்” என்ற உணர்வு பிறந்து காலம் செல்ல செல்ல “எனது” என்ற உணர்வு மேலோங்கும்
எனது பொம்மை, எனது கைபேசி, எனது சைக்கிள் எனது வீடு என்று வளரும்..
நீங்கும் போது எனது முதலில் நீங்கும்… யான் பிறகு நீங்கும்
ஆடைகளை அணியும்போது பனியன் அணிந்து சட்டையை அணிவோம். நீக்கும்போது சட்டையை நீக்கி பனியனை கழற்ற வேண்டும்.. அது போலத்தான் இதுவும் என்பார் இலங்கை ஜெயராஜ் ஐயா( வாகீச கலாநிதி கிவாஜா சொல்ல அவர் கேட்டது )
இல்லத் துறவல்ல…
உள்ளத் துறவோடு வாழ வேண்டும்…
தியாகத் திருநாள் உணர்த்துவது அதுவே.