தமிழ்த்தென்றல் திரு.வி.க. (26.08.1883 – 17.09.1953)
தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டம் துள்ளம் என்னும் ஊரில் விருதாசல முதலியார் சின்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இராயப்பேட்டை முத்து முதலித் தெருவில் தொடங்கியது இவர் பள்ளிக்கல்வி. உடல் நலிவு காரணமாக அனைத்துத் தமிழ் நூல்களையும் சமய நூல்களையும் தக்க அறிஞர்களிடம் தனியாகக் கற்றுத் தேர்ந்தார். இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். யாழ்ப்பாணம் நா.கதிரைவேற்பிள்ளையின் மாணவரானார். அரசியல் இவரை ஈர்த்தது. தேசபக்தன், நவசக்தி இதழ்களை நடத்தினார். தந்தை பெரியாரோடு தொடர்பு ஏற்பட்டது. 27.10.1920 இல் இராயப்பேட்டையில் சாது அச்சுக்கூடம் நிறுவி நவசக்தி வார இதழினைத் தொடங்கி 20 ஆண்டுகள் நடத்தினார்.
இந்தியாவிலேயே முதன்முதலில் 1918 இல் சென்னையில்தான் தொழிற்சங்கம் ஏற்பட்டது. இவர் தொழிற்சங்கத் தலைவரானார். இவர் தொழிலாளர்களுக்கு ஆற்றிய பணிகள் அளப்பரியது. சமயத்துறையில் திறம்படச் சொற்பொழிவாற்றினார். இராயப்பேட்டையில் பாலசுப்பிரமணிய பக்த ஜன சபையைத் தொடங்கி நடத்தினார். பேச்சு நடையை இலக்கிய மொழியாக்கிய பெருமைக்குரியவர். எல்லோருக்கும் எழுத்து நடை வேறு. பேச்சு நடை வேறு. இந்த இரு நடைகளையும் ஒன்றாக்கிப் புதியதோர் நடையை உருவாக்கினார். திரு.வி.க. நடை என்ற அருமை கருதி இவர் ‘தமிழ்த்தென்றல்’ என்று அழைக்கப்பட்டார். இவர் நடையைப் பின்பற்றி எளிமையாகவும் படிப்பவர் உளம் கொள்ளத்தக்க வகையிலும் எழுதியவர்கள் கல்கியும் டாக்டர் மு.வ. அவர்களுமாவர்.
அரசியல், தொழிலாளர் இயக்கம், சமயம் இவற்றைத் தாண்டி இவர் ஆற்றிய அருந்தமிழ்த் தொண்டுகள் அளப்பரியன. கவிஞராக, உரையாசிரியராக, படைப்பாளராக, மொழிபெயர்ப்பாளராக, இதழாசிரியராக, சமுதாயத் தொண்டராக வாழ்ந்தவர். தமிழ்நாட்டுக் காந்தியாக வாழ்ந்தவர். திருக்குறள், பட்டினத்தார் பாடல்களுக்கு உரையும் சம்பந்தர், அப்பர், தாயுமானவர், வள்ளலார், நம்மாழ்வார் ஆகிய அருளாளர்களின் வரலாறும் என இவர் எழுதிக் குவித்த நூல்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டவையாகும். தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் தந்தையாகவும் தொழிலாளர் குலத்துக்குத் தாயாகவும் விளங்கியவர் எனக் கல்கி அவர்கள் இவரைக் குறிப்பிடுகிறார். பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் இவரைப் பொதுச் சொத்து எனக் குறிப்பிடுகிறார்.
பெரியபுராண குறிப்புரை வசனம், உள்ளொளி, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கன. இவர் 50 நூல்களும் 100 கட்டுரைகளும் எழுதியுள்ளார். முதுமையில் பார்வை குன்றிய நிலையில் வறுமை வாட்டியது. தேடிவந்த உதவிகளையும் வாங்க மறுத்தார். இவருடைய இறப்பிற்குப் பின்னர் இறுதிச் சடங்கைப் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம் அவர்களும் டாக்டர் மு.வ. அவர்களும் செய்தனர். டாக்டர் மு.வ. அவர்கள் திரு.வி.க. என நூல் எழுதி இவரைப் போற்றினார். ஒன்றிய அரசு திரு.வி.க. அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்புச் செய்தது. தமிழக அரசு திரு.வி.க. பெயரில் விருது வழங்கி சிறப்புச் செய்து வருகிறது.