தந்தை பெரியார் (17.09.1879 – 24.12.1973)
தமிழ்நாட்டின் ஈரோடு நகரத்தில் வெங்கடப்பருக்கும் சின்னத்தாய் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர். நாகம்மையாரை வாழ்க்கைத் துணையாக ஏற்றவர் (1898). ஈரோடு நகர்மன்றத் தலைவர் (1917), வைக்கம் போராட்டம் (1924), ஐரோப்பியப் பயணம் (1931), உருசிய எகிப்து பயணம் (1932), நாகம்மையார் மறைவு (1933), தமிழ்நாடு தமிழருக்கே – இந்தி எதிர்ப்பு – சிறை செல்லல் (1938), வடஇந்தியப் பயணம் (1940), திராவிடநாடு பிரிவினை (1942), மணியம்மையாரை மணத்தல் (1949), குலக்கல்வித்திட்டத்தை எதிர்த்துப் போராடுதல் (1953), பிள்ளையார் சிலை உடைப்பு (1953), தேசியக் கொடி எரிப்பு (1955), இராமர் பட எரிப்பு (1956), சட்ட எரிப்பு (1956), தேசப்பட எரிப்பு (1967), இழிவு ஒழிப்பு மாநாடு (1967), தனித் தமிழ்நாடு கோரிக்கை முழக்கம் (1968) என வாழ்நாள் முழுமையும் போராடிப் போராடி இன விடுதலைக்கும் தமிழருக்குத் தன்மானத்தை ஊட்டுவதற்கும் உழைத்தவர். திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்.
‘பெரியார்’ என்றும் ‘வைக்கம் வீரர்’ என்றும் தமிழ்நாடு இவரைப் போற்றியது. சமகாலத்தில் வாழ்ந்த அரசியல் தலைவர்கள் அனைவராலும் மதித்துப் போற்றப் பெற்ற சிறப்புக்குரியவர். தந்தை பெரியாரின் தலையாயக் கொள்கை சுயமரியாதை அதனோடு தொடர்புடைய கடவுள் மறுப்புக் கொள்கையே. பேரறிஞர் அண்ணா முதல் பல்லாயிரவர் தந்தை பெரியாரைப் பின்பற்றினர். கடவுள் மறுப்புக் கொள்கையை வலியுறுத்தியும் தன்மானக் கொள்கையை ஊட்டவும் பெரியார் மட்டுமே 120 சிறுநூல்களை வெளியிட்டார்.
அறிஞர் அண்ணா, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர். ராதா போன்றோர் திரைப்படங்களிலும் தந்தை பெரியாரின் கருத்துகளை முன்னெடுத்துச் சென்றனர். தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தியவர். குடியரசு, விடுதலை, உண்மை இதழ்களை நடத்தியவர். தமிழ் வழிபாடு, தமிழரும் அர்ச்சகராகலாம் முதலான கொள்கைகளை முன்னெடுத்துப் போராடியவர்.
அய்யா என்று மரியாதையுடன் இன்று குறிக்கப்பெறும் பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்களின் எழுத்துகள் அனைத்தும் பெரும் தொகுதிகளாக இன்று வெளியிடப் பெற்றுள்ளன. ‘பெரியார் களஞ்சியம்’ எனும் பெயரில் 38 பெரும் தொகுதிகளாக இன்று கிடைக்கின்றன. தந்தை பெரியார் 1948 இல் சென்னை ராயபுரத்தில் திருக்குறள் மாநாடு நடத்தினார். இந்திய நாட்டின் அரசியல், சமய, சமுதாயத் தலைவர்கள் அனைவரின் கவனத்தையும் தன்பால் ஈர்த்த பெரிய ஆளுமையாளர். தந்தை பெரியாரின் சமகாலத்தில் முதலமைச்சர்களாகத் திகழ்ந்த மூதறிஞர் இராஜாஜி, பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரால் போற்றப்பெற்ற சிறப்புக்குரியவர்.