டாக்டர் பொற்கோ (09.06.1941)
பொற்கோவின் இயற்பெயர் பொன் கோதண்டராமன். அரியலூர் மாவட்டத்தில் இரும்புலிக்குறிச்சி என்னும் ஊரில் பிறந்தார். தந்தை பொன்னுசாமி, ஆசிரியராக இருந்தவர். தாயார் பழனியம்மாள். தொடக்கக்கல்வி இரும்புலிக்குறிச்சியிலும் உயர்நிலைப்பள்ளிப் படிப்பைப் பொன்பரப்பி என்ற ஊரிலும் கற்றார். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் வித்துவான் படிப்பில் சேர்ந்தார். அப்போது இரண்டாம் ஆண்டில் கோதை வளவன் என்ற காப்பியத்தை எழுதினார். இந்தக் காப்பியம் பின்னாளில் திருவேங்கடவன் பல்கலைக்கழகம், கேரளப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகிய மூன்றிலும் தமிழ் மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டது.
திருநெல்வேலி சைவ சித்தாந்தக் கழகத்தில் இளம் புலவர் பட்டமும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பண்டிதம் பட்டமும் பெற்றார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கீழைக்கலையியல் துறையில் பிஓஎல் பட்டம் பெற்றார். அங்கு மொழியியல், திராவிட மொழியியல் ஆகிய பாடங்களைப் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் அறிஞர்கள் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் மற்றும் அகத்தியலிங்கனார் ஆகியோரிடமும் மாணவராக இருந்து கல்வி பயின்றவர்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் பணியில் சேர்ந்தார். அந்தக் காலகட்டத்தில் பேரா.ச. அகத்தியலிங்கம், பேரா.குமாரசாமி ராஜா போன்றோருடன் பொற்கோ பணி செய்தார்.
1970ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழக அழைப்பின்பேரில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகள் ஆய்வுப் பணிகள் செய்துவிட்டு 1972 இல் இந்தியாவுக்குத் திரும்பினார்.
1973-74ஆம் ஆண்டுகளில் யுனெசுகோ ஆய்வுநிலை அறிஞர் என்ற பொறுப்பில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் ஆய்வு நிலைகளைப் பார்வையிட்டார்.
1973ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். அதன் பின்னர் சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணி செய்தார். 1977இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராக இணைந்தார். அங்கேயே பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் உயர்வு பெற்றார்.
பின்னர் 1999 முதல் 2002 வரை சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பதவி வகித்தார். பொற்கோ துணைவேந்தராக இருந்த காலத்தில் சென்னைப் பல்கலைக்கழகம் 5 நட்சத்திர மதிப்பைப் பெற்றது. உயர்சிறப்புப் பல்கலைக்கழகம் என்ற விருதினையும் பெற்றது. இவர் காலத்தில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு 30 கோடி ரூபாய் நிதி வழங்கியது. இந்தியாவில் இத்தகைய சிறப்புப் பெற்ற 5 பல்கலைக்கழகங்களில் சென்னைப் பல்கலைக்கழகம் முதலிடம் வகித்தது.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், குப்பத்தில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆட்சிமன்றக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.
தமிழ் சப்பானிய ஒப்பாய்வில் ஈடுபட்டார். 1982இல் டோக்கியோவில் பன்னாட்டு மொழியியல் அறிஞர்கள் கூடிய ஒரு மாநாட்டில் பொற்கோ தமிழ் சப்பானிய மொழித் தொடர்பு பற்றி விரிவாகப் பேசினார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொற்கோவின் வழிகாட்டுதலில் பேராசிரியர் ஓனோ ஓராண்டு காலம் தமிழ் சப்பான் மொழி உறவு ஆய்வைச் செய்தார். இந்தக் காலகட்டத்தில் தமிழ் சப்பானிய ஆய்வுகள் வலுவாகக் கால் ஊன்றியது. பேராசிரியர் ஓனோ மற்றும் பிற சப்பானிய அறிஞர்களுடன் தமிழ் சப்பானிய மொழிஉறவு ஆய்வுகள் மேற்கொண்டார்.
1965இல் ஆய்வுப்பட்ட மாணவராக இருந்தபோது அறிவுக்கூர்வாள் என்ற கையெழுத்துப் பிரதியை நடத்தினார். மக்கள் நோக்கு என்ற இதழை சில நண்பர்களின் உதவியோடு சில ஆண்டுகள் நடத்தினார். ஆய்வாளர்களுக்காகவும் அறிஞர்களுக்காகவும் புலமை என்ற ஆராய்ச்சி இதழை 1974இல் தொடங்கி பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக புலமை மன்றம் என்ற அமைப்பின் வாயிலாகத் தமிழியல் ஆராய்ச்சி என்னும் பெயரில் முப்பத்து நான்கு தொகுதிகள் வெளியாகின. தமிழ் ஆராய்ச்சித் துறையில் 45 ஆண்டுகள் இடையீடு இல்லாமல் பொற்கோ சில நண்பர்களின் உதவியுடன் இந்த ஆய்விதழைப் பதிப்பித்து வெளிக்கொண்டு வந்தார்.
தமிழக அரசின் கலைமாமணி விருது (1995- 96), தமிழக அரசின் திருவள்ளுவர் விருது (2009), மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கிய தமிழ்ப்பேரவைச் செம்மல் (2003) முதலான பல விருது, டாக்டர் முத்தமிழரிஞர் கலைஞர் செம்மொழி விருது (2021) முதலான விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றவர்.
வள்ளுவ நெறியும் வைதிக நெறியும், குறள் காட்டும் உறவுகள், நல்ல உடல் நல்ல மனம், திருக்குறள் அரங்கம், திருக்குறள் உரைவிளக்கம் (நான்கு தொகுதிகள்), பொது மொழியியல், மொழி சார்ந்த இயக்கங்கள் முதலான ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார்.