டாக்டர் ஜி.யூ.போப் (24.04.1820 – 11.02.1908)
கனடாவில் பிறந்து இலண்டனில் படித்துத் தமிழ்நாட்டிற்கு வந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழுக்குத் தொண்டாற்றியவர். திருக்குறள் (1886), நாலடியார் (1894), திருவாசகம் (1990) ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். திருவாசகத்தை முதன்முதலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெருமை இவரையே சாரும்.
இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் 1885 முதல் 1908 வரை தமிழ், தெலுங்கு மொழிகளைக் கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார். புறப்பொருள் வெண்பாமாலை, புறநானூறு, திருவருட்பயன் ஆகிய நூல்களைப் பதிப்பித்தார்.
சமயப்பணி புரிவதற்காக 1839 இல் தமிழ்நாட்டிற்கு வந்தார். சென்னையில் சாந்தோம் பகுதியிலும் பின்னர் தூத்துக்குடி சாயர்புரத்திலும் தங்கிச் சமயப்பணியும் தமிழ்ப்பணியும் செய்தார். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளிலும் கற்றுத் தேர்ந்து புலமை பெற்றார். தஞ்சாவூரில் சமயப் பணியாற்றிய பின்னர் உதகமண்டலத்தில் சென்று பணியாற்றினார். தஞ்சையில் கிறித்துவத்திற்கு மதம் மாறிய உயர்சாதியினர் சாதி உயர்வு தாழ்வுகளை மறக்காமல் கிறித்துவத்திலும் உயர் அந்தஸ்து தரவேண்டும் எனப் போராடினர். இதனை மறுத்த ஜி.யூ.போப் தமது பொறுப்பிலிருந்து விலகினார். பொறுப்பிலிருந்து விலகியதால் மாட்டுவண்டியில் உதகை அடைந்தார். உதகையிலும் பெங்களூருவிலும் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் இங்கிலாந்து திரும்பிச் சென்றார்.
இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் ஆசிரியராகப் பணியாற்றினார். இங்கிலாந்தில் இருக்கும்போதுதான் அமைதியாக திருக்குறளையும் நாலடியாரையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அருந்தொண்டாற்றினார். தமது மறைவிற்குப் பின்னர் தனது கல்லறையில் ‘இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்’ என்ற வாசகத்தைப் பொறிக்கச் சொன்னார். கல்லறையில் தம்மை அடக்கம் செய்யும் போது தம்முடன் திருக்குறளையும் திருவாசகத்தையும் உடன் வைக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார். விருப்பம் நிறைவேறியதா. . .?