Skip to content

சிலம்பொலி சு. செல்லப்பனார்

சிலம்பொலி சு. செல்லப்பனார் (22.12.1929 – 06.04.2019)

நாமக்கல் மாவட்டம் சிவியாம்பாளையம் என்னும் ஊரில் சுப்பராயன், பழனியம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர். கணித ஆசிரியராகப்  பணியைத் தொடங்கி  மாவட்டக் கல்வி அலுவலர்இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு உதவி அலுவலர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர்உலகத் தமிழராய்ச்சி நிறுவன இயக்குநர், தமிழ்ப் பல்கலைக்கழகப்  பதிவாளர் என உயர்ந்தவர்.

சங்க இலக்கியத் தேன் (மூன்று தொகுதிகள்) மூன்றும் நான்கும், மலர் நீட்டம்பாரதிதாசன் ஓர் உலகக் கவிஞர், வளரும் தமிழ், காப்பியக் கவிஞரும் புரட்சிக் கவிஞரும்நெஞ்சை அள்ளும் சீறா (நான்கு தொகுதிகள்), இலக்கியச் சிந்தனைகள், பெருங்கதை ஆராய்ச்சிஇக்காலக் காப்பியங்கள், பெருங்குணத்துக் கண்ணகி, சிலம்பொலிசெம்மொழித் தமிழ், அகப்பொருள் களஞ்சியம் 14  தொகுதிகள், சிலம்பொலியார் பார்வையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்

நூல்களுக்குச் சிலம்பொலியார் எழுதிய அணிந்துரைகள் தொகுக்கப்பட்டுச்  சிலம்பொலியாரின் அணிந்துரைகள்  என எட்டுத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. கடுமையான உழைப்பின் வெளிப்பாட்டை ஒவ்வொரு அணிந்துரையிலும் காணலாம். நூலை முழுமையாகப் படித்து அணிந்துரை எழுதும் பழக்கம் உடையவர்.

சிலம்பொலி என்ற பட்டத்தினைச்  சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை (1954) வழங்கினார்தமிழக அரசின் பாவேந்தர் விருதினைப்  பெற்றவர்.

சங்கப் பனுவல் முதல் தற்காலப் புதுக்கவிதைநாட்டுப்புறப்பாடல் வரை மேற்கோள்காட்டிப்  பேசும் திண்மையர். எக்கூட்டமாயினும் எப்பொருள் பற்றிப் பேசினாலும் நன்கு  படித்துச்  சிந்தித்து வந்து பேசும் ஒண்மையர். விரல் நுனியில் விவரங்களை வைத்திருப்பவர்தகுந்த மேற்கோள்களைச்  சரியான இடத்தில் பொருத்திக் காட்டும் திறம் மிக்கவர். இவர் சொற்பொழிவைக் கேட்டால்  50 –  60 நூல்களைப்  படித்த நிறைவு கேட்போருக்கு ஏற்படும்வாழ்நாள் முழுமையும் சொற்பெருக்காற்றித் தமிழ்த் தொண்டு புரிந்தவர்.

காட்சிக்கு எளியர்கடுஞ்சொல் அறியாதவர்தொலைபேசி எடுத்தவுடன் செல்லப்பன் . . என்பார்தமிழகத்தின் கிராமங்கள் தோறும் சென்று பேசிய தமிழறிஞர்களில்  இவரே முதல் இடம் பெறுவார்எங்கள் ஊர் தியாகதுருகத்தில் இருமுறை என் தந்தையார் புலவர் .அரங்கநாதனார்  அழைப்பில் வந்திருக்கிறார்ஒருமுறை நானும் அவரும் கூட்டம் முடித்து இரவு 11.40 மணி அளவில் ஒன்றாகவே சென்னை திரும்பினோம் (1976). நூல்களை ஒழுங்காகப் பாதுகாத்துப் பேணுவதில் அவருக்கு நிகர் அவரேமுறையாக அட்டை போட்டுத் தலைப்பு வாரியாக ஒழுங்காக அடுக்கி வைத்திருக்கும் நேர்த்தி அவரிடம் காணலாம்

1974 முதல் 45 ஆண்டுகள் அவரோடு பழகி வந்தேன்அவர் மறைவிற்குப் பத்து நாட்களுக்கு முன் 28.03.2019 இல்  நானும் மணிவாசகப்  பதிப்பக மேலாளர் குருமூர்த்தியும் திருவான்மியூர் இல்லத்தில் சந்தித்து உரையாடியது  இன்னும் என் நெஞ்சின்  ஆழத்தில் அழுத்தமாகப்  பதிந்துள்ளது. எளிமைஇனிமைபணிவுஉழைப்புஅறிவு வளம்சொற்பெருக்காற்றும் திறம், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கு, யாரோடும் பகை கொள்ளாத உயர் நாகரிகம் அனைத்தின் மொத்த உருவம்தான் ஐயா சிலம்பொலி சு. செல்லப்பனார். தமிழ்ச்சான்றோராக வாழ்ந்து மறைந்த இவரின் வாழ்க்கை இளைய தலைமுறையினருக்குப் பாடம். படிப்பினையும் கூட.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995