Skip to content

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்

சிலம்புச் செல்வர் .பொ.சிவஞானம் (26.06.1906 – 03.10.1995)

சென்னை மயிலாப்பூரில் பொன்னுசாமி கிராமணியாருக்கும் சிவகாமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். பள்ளிப் படிப்பை இரண்டாம் வகுப்பிற்குமேல் தொடர முடியாத நிலையில் அச்சுகோர்க்கும் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடர்ந்தார். 39 வயதிற்குப் பின் தமிழிலக்கியம் பயின்று தமிழ் நூல்கள் பல எழுதினார். இவருடைய நூல்களைப் பலர் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றனர். தேசியமும் தமிழும் இவரது இரு கண்கள். வாழ்நாள் முழுமையும் கதர் அணிந்த தேசியவாதி. என்னுடைய மாணவர் பருவத்தில் கல்லூரிக்குப் பல விழாக்களுக்கு இவரை அழைத்துச் சென்றுள்ளேன். அப்போது விவேகானந்தர் இல்லம் (ICF House) பேருந்து நிலையம் அருகில் உள்ள இருசப்ப கிராமணி தெருவில் வசித்து வந்தார்.

விடுதலைப் போரில் ஆறுமுறை சிறை சென்றார். தமிழ்நாட்டின் வடக்கு, தெற்கு எல்லைப் போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தி திருத்தணி, குமரி, செங்கோட்டை ஆகியவற்றை மீட்டார். ‘திருத்தணி தந்த செல்வர்என இவரைப் போற்றுவர். இவர் கடுமையாகப் போராடவில்லையெனில் திருத்தணியோடு சென்னையும் ஆந்திராவில் இணைந்திருக்கும். ‘மதராஸ் மனதேஎன ஆந்திரர் ஒருமித்துக் குரல் கொடுத்தபோதுதலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்பேன்எனச் சூளுரைத்துப் போராடி சென்னையைத் தமிழ்நாட்டோடு இணைத்தவர். திருப்பதி திருவேங்கடவன் மலையை விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று.

வீரபாண்டிய கட்டபொம்மன், ..சிதம்பரனார் ஆகிய இருவரைப் பற்றியும் நூல் எழுதியும் மேடைகளில் பேசியும் இவ்விருவரின் பெருமையைத் தமிழகத்தில் நிலைக்கச் செய்தார். செந்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தின் அருமை பெருமைகளைத் தமிழ்நாட்டில் பட்டிதொட்டிகள் தோறும் நாத்தழும்பேறப் பேசித் தமிழுணர்வை ஊட்டினார். சிலப்பதிகார வரிகளையும் மகாகவி பாரதியாரின் வரிகளையும் மேடைதோறும் முழங்கினார். இவருக்குச்சிலம்புச் செல்வர்என்ற பட்டத்தை டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை திருக்கரங்களால் அளித்துத் தமிழ்நாடு மகிழ்ந்தது.

தமிழ்முரசு (1945), தமிழன் குரல், செங்கோல் என்ற பெயரில் இதழ்கள் நடத்தினார். 1946 இல் தமிழரசுக் கழகம் எனக் கட்சி தொடங்கினார். தமிழ்மொழிக்காகவும் தமிழினத்திற்காகவும் குரல் கொடுத்தார். சென்னை நூலக ஆணைக்குழுத் தலைவராக, தமிழக அரசின் மேலவை உறுப்பினராகத் துணைத்தலைவர், தலைவர் எனப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றினார்.

சிலப்பதிகாரத் தொடர்பொழிவு, பாரதி தொடர்பொழிவு என சென்னையில் முழங்கினார். ‘பேசா நாளெல்லாம் பிறவா நாளேஎன்பது போல் இறுதிவரை தமிழில் முழங்கிக் கொண்டே இருந்தார். தமிழக வரலாற்றில் மூதறிஞர் இராஜாஜி, கர்மவீரர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் வரை அனைத்து முதல்வர்களின் அன்பைப் பெற்றவர்.

வள்ளலாரும் பாரதியும், பாரதி கண்ட ஒருமைப்பாடு, சிலப்பதிகாரமும் தமிழும், சிலப்பதிகார ஆய்வுரை, கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், வள்ளுவர் வகுத்த வழி, வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (சாகித்திய அகாதெமி விருது பெற்றது 1966), வள்ளலாரும் காந்தியடிகளும், எனது போராட்டம், சுதந்திரப் போரில் தமிழகம், விடுதலைப் போரில் தமிழகம் (2 தொகுதிகள்), விடுதலைக்குப் பின் தமிழ் வளர்ந்த வரலாறு என 145க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய சாதனையாளர்.

இவர் சொல்லச் சொல்ல அவருடைய உதவியாளர் அப்படியே சுருக்கெழுத்தில் எழுதுவார். அக்கட்டுரை அடுத்த நாளில் இதழ்களில் வரும். இந்த நிகழ்வுகளை என்னுடைய மாணவப் பருவத்தில் உடனிருந்து அனுபவித்த பேறு எனக்குக் கிடைத்தது. சென்னை, அண்ணாமலைப் பல்கலைக்கழகங்கள் இவருக்கு மதிப்புறு டாக்டர் பட்டம் (டி.லிட்) வழங்கிச் சிறப்பித்தன. ஒன்றிய அரசு தாமரைத்திரு (பத்மஸ்ரீ) வழங்கிப் போற்றியது.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995