க.வெள்ளைவாரணனார் (14.01.1917 – 13.06.1988)
பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகச் சிறக்கப் பணியாற்றியவர். தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்திலும் மொழிப்புலத் தலைவராகப் பணியாற்றி பணி நிறைவு பெற்றவர். பழுத்த புலமையாளர். காட்சிக்கு எளியர். கடுஞ்சொல் பேசாதவர். கனிவு மிக்கவர். சைவமும் செந்தமிழும் சிறக்கப் பணியாற்றிய பேரறிஞர். யாழ்ப்பாணத் தமிழறிஞர் விபுலானந்த அடிகள் யாழ்நூல் எழுதுவதற்கு உறுதுணையாக இருந்தவர். இந்திமொழி கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்துக் காக்கைவிடு தூது எனும் நூலை எழுதியவர்.
அற்புதத் திருவந்தாதி, இசைத்தமிழ், காக்கைவிடு தூது, பன்னிரு திருமுறை வரலாறு (இரண்டு தொகுதிகள்), சைவ சித்தாந்த சாத்திர வரலாறு, சங்ககாலத் தமிழ் மக்கள், தில்லைப் பெருங்கோயில் வரலாறு, திருமந்திர அருள்முறைத் திரட்டு என இருபத்தாறு நூல்களை எழுதியவர். இவர் தொல்காப்பியம் தொடர்பாகப் பன்னிரண்டு நூல்களை இயற்றிய பெருமகனார். 1948 இல் வெளிவந்த ‘சங்க காலத்தமிழ் மக்கள்’ எனும் இவரது நூல் குறிப்பிடத்தக்கது. இந்நூலில் சங்ககாலத் தமிழ்மக்களின் சிறப்புகளை ஏழு தலைப்புகளில் விரிவாக விளக்குகிறார். அவை தமிழகம், தமிழர்தம் வாழ்வியல், தமிழரின் ஆடவர் நிலை, பெண்டிர் நிலை, தமிழரின் கல்வி நிலை, தமிழரின் தொழில் நிலை, புலவர் கண்ட வருங்காலத் தமிழகம் என்பனவாகும்.