Skip to content

கி.வா. ஜகந்நாதன்

கி.வா. ஜகந்நாதன் (11.04.1906 – 04.11.1988)

வாகீச கலாநிதி கி.வா. ஜகந்நாதன் அவர்கள் திருச்சி மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் பிறந்தவர். தந்தையார் வாசுதேவன். தமிழ்த்தாத்தா உவே.சா. அவர்களின் உத்தம சீடர். அவரின் பதிப்புப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தவர். .வே.சா. எழுதிய என் சரித்திரம் வாழ்க்கை வரலாற்று நூலைச் சுருக்கி எளிமையாகத் தந்தவர். இந்நூல் இளங்கலைத் தமிழ் மாணவர்களுக்குப் பாடமாக இருந்தது.

எழுத்து, பேச்சு, கவியரங்கம், பட்டிமன்றம், நாட்டுப்புறப் பாடல் தொகுப்பு, சிறுகதை, புதினம், கட்டுரை, ஆராய்ச்சி, தொகுப்பு எனப் பல்துறைகளில் பெரும்பணியாற்றியவர். இவரது சொற்பொழிவினைக் கேட்கும் வாய்ப்பினைப் பலமுறை பெற்றிருக்கிறேன். சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைப்பது இவரது பேச்சுத் திறன். சிலேடையாகப் பேசுவதில் வல்லவர். 1973இல் பச்சையப்பன் கல்லூரி தமிழ் மன்றத்திற்கு இவரை அழைத்துச் சென்று பேச வைத்தது இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது.

ஆழ்ந்த புலமை நலம் உடையவர். பழகுவதற்கு மிகமிக எளிமையானவர். வாழ்நாள் முழுமையும் தூய கதராடையை மட்டுமே அணிந்திருந்தவர். கலைமகள் இதழ் தொடங்கியநாள் முதல் அதன் ஆசிரியராக இருந்து பணியாற்றியவர். தொல்காப்பியம், சங்கஇலக்கியம், சமய இலக்கியம் ஆகியவற்றை மிக எளிமையாக எழுதி மக்களுக்குப் புரியும்படி வெளியிட்டவர்.

இவர் எழுதிய கந்தரலங்காரச் சொற்பொழிவு நூல்கள் (ஏறத்தாழ 20) முருக பக்தர்களிடையே இன்றும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களிலும் சைவத் திருமுறை இலக்கியங்களிலும் ஆழங்கால்பட்ட இவர் நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்துமலையருவிஎனும் நூலாக வெளியிட்டார். நான் முதுகலைத் தமிழ் படிக்கிறபோது நாட்டுப்புறவியல் எனும் தாளுக்கு இந்த நூலே பேருதவியாக இருந்தது. 1967இல் இவரதுவீரர் உலகம்எனும் நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பெற்றது.

எண்ணற்ற சிறுகதைகளையும் எழுதியுள்ளார். அறுந்த தந்தி, வளைச் செட்டி, பவள மல்லிகை, கலைஞன், தியாகம், அசையா விளக்கு, கோவில்மணி, கலைச் செல்வி, மிட்டாய்க்காரன் போன்ற சிறுகதைகள் குறிப்பிடத்தக்கன.

மலையருவி (நாட்டுப்புறப்பாடல்கள்), வீரர் உலகம், தமிழ்ப் பழமொழிகள் (நான்கு தொகுதிகள்), பெரிய புராண விளக்கம் (பத்து தொகுதிகள்), பயப்படாதீர்கள் (தொல்காப்பியம்), தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும், கோயம்புத்தூர் இராமகிருஷ்ணமடம் வெளியிட்ட திருக்குறள் ஆய்வுத்தொகுப்பு, கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கன. இவரது படைப்புகள் தமிழக அரசால் 2007-2008ஆம் ஆண்டில் நாட்டுடைமையாக்கப்பெற்றன. இவர் எழுதியதாக இன்று நமக்குக் கிடைப்பவை 134 நூல்கள் ஆகும். தமிழ்த்தாத்தா .வே. சாமிநாதய்யரின் அன்பிற்குரிய சீடர் என்ற பெருமைக்குரியவர்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995