கி.ஆ.பெ.விசுவநாதம் (11.11.1899 – 19.12.1994)
தமிழுக்குத் தொண்டு செய்த பெருமக்களுள் நிறைவாழ்வு வாழ்ந்தவர் முத்தமிழ்க் காவலர் டாக்டர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள். வாழ்க்கை என்னும் புத்தகத்திலும் உலகம் என்கிற பல்கலைக்கழகத்திலும் தாம் கண்டும் கேட்டும் அறிவு பெற்றவர். உண்ணியூர் சபாபதி முதலியாரிடமும் இலக்கணமும் நாவலர் வேங்கடசாமி நாட்டாரிடம் இலக்கியமும் கற்றறிந்தார்.
குர்ஆன் குறித்து சையத் முர்த்துஷா ஹஜரத்திடமும் பைபிள் பற்றி அருள்திரு சாமுவேல் நாட்டாரிடமும் சித்தாந்தத்தை வாலையானந்த சுவாமிகளிடமும் வேதாந்தத்தை நீலகிரி பெரியபண்ணைப் பிள்ளையிடமும் தெரிந்து கொண்டார். வாழ்நாள் முழுதும் மாணவராகவே இருந்து பயின்று முத்தமிழ் புலமை பெற்றுள்ளார். மறைமலையடிகள், திரு. வி. க, நாவலர் சோமசுந்தர பாரதியார் முதலிய தமிழறிஞர்கள் தொடர்பால் தாமாக முயன்று தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுப் புலமை பெற்றார்.
நீதிக்கட்சி உறுப்பினராகி படிப்படியாக உயர்ந்து அதன் தலைவர்களுள் ஒருவரானார். தந்தை பெரியார் அவர்களோடு மிக நெருக்கமாக இருந்தார். சுயமரியாதை பஞ்சாங்கம் என்ற நாட்காட்டினைப் பல்லாண்டுகள் வெளியிட்டார். “தமிழ்நாடு தமிழருக்கே” என இந்தி எதிர்ப்புப் போரின்போது தோன்றிய வீர முழக்கம் வெறும் முழக்கமாகிவிடக் கூடாது என்ற உணர்வினால் ‘தமிழர் நாடு’ என்ற இதழைத் தொடங்கி நடத்தினார். இந்தி எதிர்ப்புக்காக 17.01.1965 இல் மாபெரும் மாநாடு கூட்டி எல்லாக் கட்சித் தலைவர்களையும் ஒரே மேடையில் ஒருங்கிணைத்தார்.
நாடறிந்த நாவலராகிய முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் அற்புதமாகப் பேசும் ஆற்றல் பெற்றவர். இவருடைய பேச்சுப் பாமரருக்கும் புரியும் தன்மை உடையது. இவரின் எடுப்பும் தொடுப்பும் முடிப்பும் இனியன. சிந்தித்துக் குறிப்பெடுத்து முறைப்படுத்திக் கொண்டு ஒழுங்காக உணர்ச்சி உந்த நகைச்சுவை முந்த நறுக்குத்தெறித்தாற் போல்நயம்பட வாதங்கள் அடுக்கி வர, மிடுக்காகப் பேசுவார். இலக்கியப் பேச்சில் இனிமை தவழும்; ஆராய்ச்சி உரையில் அறிவு திகழும். போராட்டப் பொழிவில் உணர்வு ஓங்கும். குறித்த நேரத்தில் முடிப்பார் என இவர் பேச்சினை மதிப்புரைப்பர்.
சித்த மருத்துவத்தில் ஈடுபாடு உடையவர். தமிழ்நாடு சித்தமருத்துவராகத் திகழ்ந்தவர். தமிழ் மருந்துகள் என்ற இவருடைய நூல் அனைவரின் பாராட்டைப் பெற்றது. மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் இவரிடம் நட்பு பாராட்டினார். அவரின் துணையோடு சித்த மருத்துவ வளர்ச்சிக்குப் பெரும்பாடுபட்டார். இவருக்கு இயலிசை நாடக மன்றம் கலைமாமணி பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
பேராசிரியர் டாக்டர் வ.சுப. மாணிக்கம் அவர்கள் மதுரைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த போது இவருக்கு மதிப்புறு டாக்டர் பட்டம் (D.Litt – 1980) வழங்கிச் சிறப்புச் செய்தார். பின்னர் கோயமுத்தூர் வேளாண் பல்கலைக்கழகமும் இவருக்கு மதிப்புறு டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்புச் செய்தது. பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த போது நடத்திய இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டின் துணைத் தலைவர்களுள் ஒருவராக இருந்து தொண்டாற்றினார்.
தமிழ் மருந்துகள், தமிழ்ச்செல்வம், தமிழின் சிறப்பு, திருக்குறள் கட்டுரைகள் (1958), திருக்குறள் புதைபொருள் இரண்டு பாகங்கள் (1956, 1974), திருக்குறளில் செயல்திறன் (1984), நபிகள் நாயகம், நல்வாழ்வுக்கு வழி, நான்மணிகள், மணமக்களுக்கு, மாணவர்களுக்கு, வள்ளலாரும் அருட்பாவும் (1980), வள்ளுவர் (1945), வள்ளுவரும் குறளும் (1953) தமிழின் சிறப்பு என்பன போன்ற இருபத்து மூன்று நூல்களைப் படைத்துள்ளார்.
முத்தமிழ்க் காவலர் (1956), சித்தமருத்துவ சிகாமணி (1965), வள்ளுவ வேல் (1973) ஆகிய விருதுகளைப் பெற்றவர். 2000 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இவர் பெயரால் தமிழக அரசு விருதுகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இவரது உருவம் பொறித்த ஐந்து ரூபாய் அஞ்சல்தலையினை ஒன்றிய அரசின் அஞ்சல்துறை வெளியிட்டுள்ளது. 1997இல் திருச்சியில் தொடங்கப்பெற்ற அரசு மருத்துவக் கல்லூரிக்கு இவர் பெயரைத் தமிழக அரசு சூட்டியுள்ளது. 95 ஆண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்த தமிழறிஞர் இவர்.