Skip to content

கா.வி. ஸ்ரீநிவாஸ மூர்த்தி

கா.வி. ஸ்ரீநிவாஸ மூர்த்தி (02.02.1946)

திருமதி.பர்வதவர்த்தினி, திரு. காஞ்சிபுரம் இராமச்சந்திரன் விசுவநாதன் இணையரின் மகனாக 02.02.1946 அன்று பிறந்தவர். ஆந்திராவில் உள்ள சித்தூரில் 12ஆம் வகுப்புவரை படித்தவர்.

சென்னையில் சுங்கத்துறையில் பணிபுரிந்து வந்தார். அப்போது தியாகராயர் கல்லூரியில் மாலை வகுப்பில் சேர்ந்து இளம் அறிவியல் பட்டம் பெற்றார். உதவி ஆட்சியர் பணியின்போது விருப்ப ஓய்வு பெற்றார். சின்னச்சாமி இராசேந்திரன் எழுதிய பாமரருக்கும் பரிமேலழகர் நூலை செம்மை செய்வதற்குப் பெரிதும் துணையாக நின்றவர்.

இவரது மனதுக்கு நெருக்கமான ஒன்று பாரதி பற்றிய ஆராய்ச்சியாகும். சுங்கத் துறையில் பணியாற்றினாலும் ஆழ்ந்த தமிழ்ப் புலமை உடையவர். 75 வயதிலும் நூலகத்தைச் தேடிச் சென்று படிக்கும் பழக்கமுடையவர். அச்சுப்படி திருத்துவதில் நிபுணர். வேகமாகவும் விரைவாகவும் பிழையின்றிப் பிழைதிருத்தும் பெற்றியர். சுறுசுறுப்பாக இயங்கி இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். காஞ்சி காமாட்சியம்மன் அருள்பெற்றவர். விஸ்வரூபம் (1979), பாப்பாப் பாட்டில் பகவத்கீதை (2012), சொல் பொருள் அறிவோம் (2013), நினைவின் நீரோட்டம் (2014), பாரதி ஒரு அத்வைதியே (2016), சிந்தனை என்னும் மல்லல் பேர்யாறு (2017), சமஸ்காரம் (2019), நாடோடி மனம் (2019), வேதாந்தத்தில் சில வேர்கள் (2019) எனப் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மகாகவி பாரதியார்மேல் தீராக் காதல் கொண்டவர். இவர் எழுதி அண்மையில் வெளிவந்த பாரதி கவிதைகளில் குறியீடுகள்என்னும் நூல் குறிப்பிடத்தக்கது. 77 வயதிலும் நூலகங்களுக்குச் சென்று படிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமிக்கவராகத் திகழ்கிறார்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995