கவியோகி ச.து.சுத்தானந்த பாரதியார் (11.05.1897 – 07.03.1990)
திருமதி. காமாட்சி, திரு. ஜடாதரர் இணையருக்கு 11.05.1897 அன்று சிவகங்கையில் பிறந்தவர். இவரது தமிழ்ப் புலமைக்குக் காரணமானவர் வித்துவான் தெய்வசிகாமணி. இவருக்குப் பிள்ளைமைப் பருவத்திலேயே இறையுணர்வு, சமயக்கல்வி, புராண அறிவு வாய்த்திருந்தது. இசைப் பயிற்சியைப் பூச்சி ஐயங்காரிடம் பெற்றவர். யோகம், குண்டலினி, மந்திர உபதேசம் பெற்றவர். 1920இல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டவர். வ.வே.சு. ஐயரோடு கல்விக்கூடம் நடத்தியவர். சமரச போதினி, தொழிற்கல்வி, இயற்கை ஆகிய இதழ்களின் ஆசிரியர். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், பிரெஞ்சு மொழிகளில் புலமை பெற்றவர். உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்று வந்தவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர். கவிதையில் 102 கீர்த்தனை நூல்களைப் படைத்துள்ளார். 125 நாடகங்களை எழுதியுள்ளார். திருக்குறள் இன்பம் உட்பட ஆய்வு நூல்கள் 7, கட்டுரை நூல்கள் 19, பயண நூல்கள் 3, பள்ளிகளுக்குத் திருக்குறள் விருந்து 5 தொகுதிகள் மற்றும் பாரத வாசகம் 1 முதல் 10 வகுப்புகளுக்கு, இரண்டு அறிவியல் நூல்கள், ஆன்மிகம், யோகம் தொடர்பான 40 நூல்கள், ஆங்கிலத்தில் 51, தெலுங்கில் 2, சமஸ்கிருதத்தில் 3, இந்தியில் 4, பிரெஞ்சில் 6 என 366 நூல்களை எழுதியுள்ளார்.
இன்னும் பட்டியலில் வாரா நூல்களும் உண்டு. பாரதசக்தி மகாகாவியம் நூலுக்காக 1984 இராஜராஜன் விருது வழங்கப்பட்டது. சிவகங்கையில் தவக்குடில் நிறுவினார். கவியோகி, மகரிஷி உட்பட பல விருதுகள் பாராட்டுகள் பெற்றவர், தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் இவருக்கு கலாசிகாமணி பட்டம் சூட்டியது. இவரது தமிழ் வழிபாடு என்ற நூல் அறிஞர்களால் பாராட்டப்பெற்றது. இவருடைய “பாரத சக்தி மகாகாவியம்” எனும் நூல் சுதந்திரம் கிடைக்கும் வரை பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் மவுன விரதம் காத்தபோது மனதில் தோன்றிய காவியம் ஆகும். 93 ஆண்டுகள் வாழ்ந்து 1990 மார்ச் 7இல் இறைவனடி சேர்ந்தார்.