கவியரசு கண்ணதாசன் (27.06.1927 – 17.10.1981)
கவியரசு கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. இவர் தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டி என்ற ஊரில் நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபில் சாத்தப்ப செட்டியார், விசாலாட்சி ஆச்சி இணையாருக்கு 8வது மகனாக 27-06-1927 அன்று பிறந்தார். இவருடன் உடன்பிறந்தோர் 10 பேர். சிறு வயதில் இவரை சிகப்பு ஆச்சி என்பவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியைச் சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். ஒரு பத்திரிகை ஆசிரியர் பணிக்குச் சென்றபோது அவர் வைத்துக் கொண்ட புனைப் பெயர் கண்ணதாசன்.
கண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி என்னும் பொன்னம்மாள் என்பவரோடு 1950 பிப்ரவரி 9ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது. இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.
கண்ணதாசன், பார்வதி என்பவரை 1951 நவம்பர் 11ஆம் நாள் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர். ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் உள்ளார்.
கவியரசு கண்ணதாசன் கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
அரசியல் ரீதியாக எம்.ஜி.ஆரை கண்ணதாசன் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். தம்மைப் பற்றி கண்ணதாசன் விமர்சித்தபோதிலும் தமிழக அரசின் அரசவைக் கவிஞராக கண்ணதாசனை எம்.ஜி.ஆர். நியமித்தார். ஈ.வி.கே.சம்பத்துடன் இணைந்து தமிழ் தேசியக் கட்சியைத் துவக்கினார். பின்னர் தமிழ் தேசியக் கட்சி காங்கிரசுடன் இணந்தது.
நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள், புதினங்கள், சிறுகதைகள், குறுங்காப்பியங்கள் ஆகியவற்றைப் படைத்தப் பெருங்கவிஞர். சண்டமாருதம், திருமகள், திரைஒலி, தென்றல், தென்றல் திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களை நடத்தியவர். நான் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மாணவராக இருந்தபோது அவரைப் பலமுறை சந்தித்திருக்கிறேன். கல்லூரிக்குப் பேச அழைத்துச் சென்றிருக்கிறேன். மிக எளிமையானவர். அன்பானவர். குழந்தைமனம் படைத்தவர். அவர் நடத்திய கண்ணதாசன் இதழ் எங்களைப் போன்ற மாணவர்களிடையே செல்வாக்குப்பெற்றிருந்தது.
வனவாசம் நூலில் தன் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களை அப்படியே எழுதி இருக்கிறார். அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். காங்கிரஸ் பிளவுபட்டபோது இந்திராகாந்தி பக்கம் நின்றார். அது தான் இன்றைய காங்கிரஸ் கட்சி. தான் இருந்த கட்சிகளின் தலைவர்களை, அவர்களது உண்மை சொரூபம் தெரிய வந்ததும் அந்தக் கட்சியில் இருந்து விலகிவிடுவார். “உதவாத பல பாடல் உணராதோர் மேற்பாடி ஓய்ந்தனையே பாழும் மனமே“ என்று தன் தவறுகளை ஒப்புக் கொண்டவர். அதனாலேயே திரு சோ அவர்கள், தான் படித்த சுயசரிதங்களில் மகாத்மா காந்தியின் சத்யசோதனையும், கண்ணதாசனின் வனவாசமும் தான் உண்மையான சுயசரிதங்கள் என்று சொல்லி இருக்கிறார்.
1950முதல் 1981 ஆம் ஆண்டு அவர் மறையும் வரை தமிழ்த் திரைப்படப் பாடல் துறையைத் தம் கட்டுக்குள் வைத்திருந்தவர். இவருடைய திரைப்படப் பாடல்கள் காலங்கடந்தும் நிற்கக் கூடியன. இவருடைய பாடல்களை ஆய்வுசெய்து முனைவர்பட்டம் பெற்றோர் பலர்.
இவர் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் (பத்து தொகுதிகள்), பகவத்கீதை உரை, திருக்குறள் காமத்துப்பால் உரை, மாங்கனி, மனவாசம் ஆகியன குறிப்பிடத்தக்கன. இவருடைய சேரமான் காதலி நூல் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றது.
உடல்நலக் குறைவு காரணமாக 1981, ஜூலை 24இல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்திய நேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22இல் எரியூட்டப்பட்டது.
தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. 84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981இல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களால் அறிவிக்கப்பட்டு, 1990ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992ல் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்த்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
கவிஞர், எழுத்தாளர், காப்பிய ஆசிரியர், கட்டுரையாளர், பாடலாசிரியர், திரைப்பாடலாசிரியர், கதை வசனம் எழுதியர், இதழாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர். இவருடைய கவிதையும் உரைநடையும் படிப்போர்க்குத் தேன்போல் இனிக்கும் தன்மையன. இவருடைய கவிதையைப் போலவே இவருடைய உரைநடையும் எளிமையானது. எழிலானது.