கவிமாமணி முனைவர் குமரிச்செழியன் (20.03.1951)
திருமதி மா. செல்லம்மாள் திரு இல முத்தையா நாடார் இணையரின் மகனாக 20-03-1951 அன்று கன்னியாகுமரி மாவட்டம் செம்பொன்கரை என்ற சிற்றூரில் பிறந்தவர். இயற்பெயர் துரைசாமி. மேலக்கிருஷ்ணன்புதூர் என்ற சிற்றூரில் இயங்கிய அரசு தொடக்கப் பள்ளியில் பயின்றார். பிறகு மணிக்கட்டி பொட்டல் அரசு உயர்நிலைப்பள்ளியில் மூன்றாம் நிலையில் வெற்றி பெற்றார். 1969-70 இல் நாகர்கோயில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் புகுமுக வகுப்பும் இளநிலை கணிதமும் படித்தார். 1976இல் அரசு பணியில் சேர்ந்தார். அஞ்சல் வழியில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் பட்டம் பெற்றார்.
சென்னை சட்டக் கல்லூரியில் மாலை வகுப்பில் பயின்று பிஎல் பட்டம் பெற்றார். முதுநிலை உளவியல் பட்டமும் பெற்றவர். சென்னை மாநிலக் கல்லூரியில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார். சித்த மருத்துவத்தில் பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொகுதி 4 தேர்வில் வென்று சென்னையில் மருத்துவக் கல்வித் துறையில் இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். அதன்பின் தொகுதி 2 தேர்வில் வென்று உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறையில் பணி ஏற்றார்.
தமிழ்நாடு முழுவதும் முகாம் பணியில் ஈடுபட்டு அப்பணியை சிறக்கச் செய்தவர். 31 மார்ச் 2010 அன்று பணி நிறைவு பெற்றார். கவிதை எழுதும் ஆர்வமும் பழக்கமும் அவரை பாரதி கலைக்கழகத்தின் வழி கவிமாமணி விருது பெற வைத்தது.
பாரதி கலைக்கழகத்தின் கவிஞர், செயற்குழு உறுப்பினர் பொருளாளர் செயலாளர் என உயர்ந்து இப்போது தலைவராகவும் உள்ளார். 1951இல் பாரதி சுராஜ் தலைமையில் நிறுவப்பட்ட இவ்வமைப்பு இன்று 73 ஆண்டுகளாகத் தொடர்ந்து 700ஆவது கவியரங்கத்தை நடத்த உள்ளது. அதில் இவரது பங்களிப்பு மிகுதி. பாரதியுடன் நில்லாமல் பாரதி போற்றிய வள்ளுவர் கம்பர் இளங்கோ மூவருக்கும் சிறப்பு நிகழ்வுகள் உரை அரங்குகளை ஏற்படுத்துவது முதலான பணிகளையும் பல இலக்கிய மற்றும் திருக்குறள் அமைப்புகள் மூலம் நடத்தி வருகிறார். பாரதி கழகத்தோடு திருக்குறள் நற்பணி மையம், திருக்குறள் வாழ்வியல் நெறி சங்கம் என இவர் குறள் பணி இன்றும் தொடர்கிறது.
திருக்குறள் பணிக்காக மட்டும் 2021 வரை இருபத்தி எட்டு விருதுகள் பெற்றவர். இதுதவிர நாற்பத்தி மூன்றுக்கும் மேற்பட்ட சாதனை விருதுகளை பெற்றவர். கவிதை. உரை. கட்டுரை என நாற்பத்தி ஒன்பது நூல்களை எழுதியுள்ளார். 39வது இலக்கிய அமைப்புகளுடன் இன்றுவரை தொடர்பில் இருக்கிறார். இவர் எழுதிய ‘திருக்குறள் ஒரு அறிவியல் களஞ்சியம்’ என்ற நூல் சிறப்பு வாய்ந்த நூலாகப் போற்றப்படுகிறது.