கவிப்பேரரசு வைரமுத்து (13.07.1953)
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் இராமசாமித்தேவர் – அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக 13.07.1953 இல் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இளங்கலை, முதுகலை (1971 – 1976) பயின்றவர். அவருடன் ஒன்றாகப் படித்த ஒருசாலை மாணாக்கன் என்ற உரிமையுடையவன். 1972 இல் அவர் இளங்கலைத் தமிழ் படிக்கும் மாணவராக இருந்தபோது “வைகறை மேகங்கள்” எனும் முதல்கவிதை நூல் வெளிவந்தது. 1980இல் ‘நிழல்கள்’ திரைப்படத்தில் ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’ எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார். இவருடைய மனைவியின் பெயர் மு.பொன்மணி. இவருக்கு மதன் கார்க்கி, கபிலன் என இரு மகன்கள் உள்ளனர்.
இவர் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். இவர் 6000 பாடல்களுக்கும் மேலாக எழுதியுள்ளார். இளையராஜாவுடனும், ஏ.ஆர். ரகுமானுடனும் இணைந்து வழங்கிய பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுத் தந்துள்ளன.
வைகறை மேகங்கள், திருத்தி எழுதிய தீர்ப்புகள், இன்னொரு தேசியகீதம் முதலானவை இவரது புகழ்பெற்ற கவிதைத் தொகுப்புகள் ஆகும். ‘இதுவரை நான்’ எனும் தலைப்பில் தன்வரலாறு நூலையும் எழுதியுள்ளார். கல்வெட்டுக்கள், இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள், கொஞ்சம் தேனீர் நிறைய வானம், தமிழாற்றுப்படை முதலான தலைப்புகளில் இவர் எழுதிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.
கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர் (இவை ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது) ஆகிய மூன்றும் இவரது பெரும் படைப்புகளில் குறிப்பிடத்தக்கன.
கலைமாமணி விருது (1990), சாகித்துய அகாதமி விருது (2003 நாவல்– கள்ளிக்காட்டு இதிகாசம்), பத்மபூசன் விருது (2014), சிறந்த தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருது (ஏழு முறை) முதலானப் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.