Skip to content

கவிஞர் சுப்பு ஆறுமுகம்

கவிஞர் சுப்பு ஆறுமுகம் (28.07.1928)

திரு.சுப்பையாபிள்ளைசுப்பம்மாள் ஆகியோருக்கு மகனாக சந்திரபுதுக்குளம், திருநெல்வேலியில் 28-07-1928இல் பிறந்தார். இவருக்கு ஆரம்பப் பள்ளியில் தமிழ் கற்றுக்கொடுத்த முதல் ஆசான் ராம அய்யர். உயர்பள்ளியில் தமிழாசிரியர் நவநீத கிருஷ்ணபிள்ளை ஆகியோரே இவரது தமிழார்வத்துக்கும், தமிழ் அறிவுக்கும் வித்திட்டவர்கள்சங்கீத அறிவு இவரது தந்தையாரிடமிருந்து பெற்றது.

தன்னுடைய 14ஆவது வயதிலேகுமரன் பாட்டுஎன்ற கவிதைதொகுப்பை வெளியிட்டார். இதுபொன்னிஎன்ற இலக்கிய மாத சஞ்சிகையில் தொடராக வெளியிடப்பட்டது. இவரைச் சென்னைக்கு அழைத்து வந்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்இவரைத் தனது வீட்டிலேயே தங்க வைத்து  கல்கி  எழுதிய  காந்தியின் சுயசரிதையை கொடுத்து அதை வில்லுப்பாட்டாக்கிப் பாடச்சொன்னார்.

சென்னையில் இயங்கும் தேசியக் கிராமியக்கலை ஆதரவு மையத்தின் ஏற்பாட்டில் ஐந்து நாள் சிறப்பு வில்லுப்பாட்டுப் பயிற்சி முகாம் அண்மையில் நடத்தப்பட்டது. 12 மாணவர்கள் மிகவும் பயனடைந்த இந்த வில்லுப்பாட்டு பயிற்சியை அளித்தவர் கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்கள்.

2004ஆம் ஆண்டுக்கான ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை விருது, 2005ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் சங்கீத நாடக அகாதமி விருது, 2021ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது முதலான விருதுகளைப் பெற்றவர்.

கலைவாணரது பத்தொன்பது திரைப்படங்களுக்கும், நடிகர் நாகேஷின்  ஏறக்குறைய அறுபது திரைப்படங்களுக்கும் நகைச்சுவைப் பகுதிகளை சுப்பு ஆறுமுகம் எழுதிக்கொடுத்தார். இவர் எழுதிய சின்னஞ்சிறு உலகம் திரைப்படம் இயக்குனர்  கே.எஸ்.கோபாலகிருஷ்ணனால்  தயாரிக்கப்பட்டது.

மனிதர்கள் ஜாக்கிரதை என்று ஒரு நாடகம் இவரால் எழுதப்பெற்று புத்தகமாக வெளியிடப்பெற்றது. பின் அதுவே நாடகமாகவும் மேடையேற்றப்பட்டது. ‘காப்பு கட்டி சத்திரம்என்று ஒரு வானொலித்தொடர் நாடகத்திலும் இவரது பங்கு கணிசமாக உண்டு.

காந்தி கதை, திரும்பி வந்த பாரதிதிலகர் கதைபுத்தர் கதை இப்படி ஏராளமான வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் எழுதிப் பாடியுள்ளார். திருவையாறு தியாகராஜ ஆராதனை உற்சவத்தில் நூற்று நாற்பதைந்து வருடங்களாக இல்லாத ஒன்றை செய்து காட்டினார். தமிழை ஒலிக்கச் செய்தார். அதாவது தியாகப் பிரம்மத்தைப் பற்றித் தமிழில் சுப்பு ஆறுமுகம் வில்லுப்பாட்டில் கதை நிகழ்த்தினார்இலங்கையிலும்சிங்கப்பூரிலும் நிகழ்ச்சிகள் செய்திருக்கிறார். ஒரு மகனும், ஒரு மகளும் இவருடனேயே வில்லிசைபாடிக் கலையை வளர்த்து வருகிறார்கள். இவருடைய மகளும் மகனும் இவருடன் இணைந்து வில்லுப்பாட்டு நிகழ்ச்சியினைச் செய்துவருகிறார்கள். இவருடைய மருமகன் பேராசிரியர் டாக்டர் சீனி. திருமகன் ஆவார். (மேனாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர், சென்னைப் பல்கலைக்கழகம்).

இவர் எழுதிய நூல்கள், வில்லிசை மகாபாரதம், வில்லிசை இராமாயணம், நீங்களும் வில்லுப்பாட்டு பாடலாம் ஆகியனவாகும். வில்லிசை வேந்தர், கலிபோர்னியாவில் கௌரவ டாக்டர் பட்டம் (டி.லிட், 1995),  ஞான கலா பாரதி, வாழ்நாள் சாதனையாளர் விருது (மஸ்கட்) முதலான இருபத்துக்கும் மேற்பட்ட விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றவர்.

மகான்களின் கதைகளை வரலாறுகளை அவர்கள் போதித்த தத்துவங்களைப் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக, வில்லுப்பாட்டின் வழியே சொல்வதில் இவருக்கு நிகர் இவரே. தூய ஒழுக்கமும் சிறந்த புலமையும் நிறைந்த பண்பாளர்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995