கலைஞர் மு. கருணாநிதி (03.06.1924 – 07.08.2018)
திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் முத்துவேலர் அஞ்சுகம் இணையருக்கு மகனாகத் தோன்றியவர்; தமிழக முதல்வராக ஆறுமுறை இருந்த பெரும் சிறப்புக்குரியவர்; கவிஞராக, எழுத்தாளராக, சிறுகதை ஆசிரியராக, புதின ஆசிரியராக, வரலாற்றுப் புதின ஆசிரியராக, நாடக ஆசிரியராக, திரைப்பாடலாசிரியராக, திரைக்கதை வசனகர்த்தாவாக, இதழாசிரியராக, ஆற்றல்மிக்க சொற்பொழிவாளராக, பன்முக ஆளுமை கொண்டவராகத் திகழ்ந்தவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்.
பேரறிஞர் அண்ணாவிற்குப் பிறகு கழக இயக்கத்தை வளர்த்தவர். ‘தம்பிக்கு’ என அண்ணா எழுதினார். ‘உடன்பிறப்பே’ எனக் கலைஞர் எழுதினார். ‘உடன்பிறப்பே’ என முரசொலியில் எழுதி உடன்பிறப்பு நேயத்தை உருவாக்கியவர். காலையில் முரசொலி ஏட்டினைத் தொடுவோர் கலைஞரின் கழக இலக்கியத்திற்காக எனலாம். அக்கடிதங்கள் தமிழக வரலாற்றுக் கருவூலங்கள். தந்தை பெரியாரைப் போல 94 ஆண்டுகள் சமுதாயத் தொண்டாற்றிய பெருந்தகை.
திரைப்படங்களுக்கு இவர் எழுதிய வசனங்களும் இவர் ஆற்றிய சொற்பொழிவுகளும் வரலாற்றையே மாற்றி எழுதின. சங்ககால வேந்தரைப் போல கவிஞராகவும் ஆட்சித் தலைவராகவும் விளங்கியவர் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள். பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெறாதவர் கலைஞர். ஆனால் இவரது படைப்புகளை ஆராய்ந்து பலர் முனைவர் பட்டங்களையும் எம்.ஃபில் என்கிற இளமுனைவர் பட்டங்களையும் பெற்றுள்ளனர். சிறப்புக்குக் காரணம்? ஒற்றைச் சொல்தான் பதில். இவரது உழைப்பு உழைப்பு உழைப்பு. ஓய்வறியா உதயசூரியன் இவர். தமிழையும் தமிழ் அறிஞர்களையும் போற்றியவர். தந்தை பெரியாரையும் அறிஞர் அண்ணாவையும் இரு கண்களாகப் போற்றியவர்.
திருவள்ளுவருக்குக் கோட்டம் கண்டார்; 133 அடி உயர சிலை எடுத்தார்; குறள் உரை எழுதினார்; குறளோவியம் தீட்டினார்; சிலப்பதிகாரத்திற்காக பூம்புகார் எழு நிலை கண்டார்; கண்ணகி, கோவலன், மாதவி, இளங்கோவடிகள் சிலை வடித்தார்; தாய்த் தமிழைச் செம்மொழியாக்கினார்; ஒன்றிய அரசின் செம்மொழி நிறுவனம் கண்டார். வேறென்ன சொல்ல. . . தமிழுக்காகவே வாழ்ந்தவர். தமிழ் உயர தமிழர் நலம் பெற வாழ்ந்தவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்.