கணபதி ஸ்தபதி (1927 – 2011)
கணபதி ஸ்தபதி அவர்கள் காரைக்குடிக்கு அருகில் உள்ள பிள்ளையார்பட்டியில் வைத்தியநாத சிற்பிக்கும் வேலம்மாளுக்கும் 05-09-1927 அன்று மகனாகப் பிறந்தார். இவர்கள் குடும்பம் தஞ்சைப் பெருவுடையார் கோயில் – தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய சிற்பியான குஞ்சர மல்லன் ராஜ ராஜ பெருந்தச்சனின் வழிவந்தவர்கள் எனக் கருதப்படுகிறது.
இவர் காரைக்குடியில் உள்ள அழகப்பச் செட்டியார் கல்லூரியில் கணிதத்தில் தேர்ச்சி பெற்றார். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் 1957இல் இவர் பழனியில் உள்ள தண்டாயுதபாணி கோயில் இந்துசமய அறநிலை வாரியத்தில் சிற்பியாகப் பணியில் சேர்ந்தார். இவரின் தந்தை 1960இல் மறையும் வரை அங்கேயே பணிபுரிந்தார். தந்தையின் மறைவுக்குப் பின் அப்பணியைத் துறந்துவிட்டு 1957-1960 வரை தன் தந்தை முதல்வராகப் பணிபுரிந்த மாமல்லபுர அரசு கட்டட மற்றும் சிற்ப கலைக்கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். 27 ஆண்டுகள் அப்பணியில் இருந்தார்.
1.காரைக்குடி கம்பன் மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்த்தாய் கோயிலைக் கட்டியவர்.
2. 1980 களில் இந்துக்களின் கட்டிடக்கலையை மறுசீரமைப்பு செய்தல் தொடர்பாகச் சென்னைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் வாஸ்து சாஸ்திரம் குறித்தப் பட்டப் படிப்புகள் வருவதற்குக் காரமாக இருந்தவர்.
3. அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு வாஸ்து வேத அறக்கட்டளை என்ற அமைப்பை நிறுவினார். அத்தோடு அதுகுறித்த ஆய்வு மையத்தையும் நிறுவினார். வாஸ்து சாஸ்திரத்தை உலகமயமாக்கும் முயற்சியையும் மேற்கொண்டார்.
4. வை. கணபதி ஸ்தபதி (மற்றும்) குழுமம் என்ற ஒன்றை நிறுவினார். இவ்வமைப்பு தொழில் சார்ந்து இருந்தது. இதன் தலைவராக விளங்கினார்.
5. இவர் அமெரிக்காவில் மேயோனிக் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் என்ற ஒன்றை மிகச் சிறிய அளவில் தொடங்கி அதில் வேத சாஸ்திரத்தை நடத்தவும் ஏற்பாடு செய்தார். அதற்கு டாக்டர் ஜொபி மெர்சே என்பவரைப் பேராசிரியராகவும் வேந்தராகவும் நியமித்தார்.
பல நாடுகளும் அமைப்புகளும் இவருக்கு விருதுகளும் பாராட்டுகளும் வழங்கிச் சிறப்பித்துள்ளன.
இவர் புகழ்பெற்ற சிற்பி ஆவார். பத்மபூஷன் விருது பெற்ற இவர் புகழ் பெற்ற கட்டடங்களையும் சிலைகளையும் வடிவமைத்தவர். இவர் பல்வேறு கோயில்கள் மற்றும் சிலைகளை வடிவமைத்துள்ளார். சில மிகவும் புகழ்பெற்றவை.
- கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை.
- சென்னை வள்ளுவர் கோட்டம்.
- தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகம்.
- வாசிங்கடன் டி. சி. அருகேயுள்ள சிவா–விஸ்ணு கோயில்
- மதுரையின் நுழைவாயில் வளைவு
- அமெரிக்காவின் அவாய் தீவிலுள்ள சமரச சன்மார்க்க இறைவன் கோயில்
- ஹைதராபாத் ஹூசைன்–சாகர் ஏரியில் உள்ள புத்தர் சிலை.
- இவரின் மூத்தோன் என்றும் முதற்சிற்பி என்றும் அறியப்படும் மயன் என்பவருக்கு மாமல்லபுரத்தில் இவர் சிலை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மேல்மருவத்துரில் உள்ள ஆதிபராசக்தி சிலையை உருவாக்கியவர்.
சிற்பச் செந்நூல் என்னும் மிகச் சிறந்த நூலைப் படைத்தளித்தவர். உடல் நலக்குறைபாடு காரணமாக 05-09- 2011 அன்று மறைந்தார்.