Skip to content

இரா. நெடுஞ்செழியன்

இரா. நெடுஞ்செழியன் (11.07.1920 – 12.01.2000)

இவர் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணபுரத்தில், 11.07.1920 ஆம் தேதி இராசகோபாலனார்மீனாட்சி சுந்தரி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் இரா.கோ.நாராயணசாமி என்பதே ஆகும்.

பின் நாட்களில் பகுத்தறிவு தந்தை பெரியாரின் திராவிட சித்தாந்தக் கருத்துகளாலும், தமிழ்மொழியின்மீது கொண்ட பற்றாலும் ஈர்க்கப்பட்டு இவர் அரசியல் ரீதியாக தனது பெயரை நெடுஞ்செழியன் என்று மாற்றி வைத்துக் கொண்டார்.

இவரது மனைவி பெயர் மருத்துவர் விசாலாட்சி. இவர்களுக்கு மதிவாணன் என்னும் மகன் உள்ளார். இவரது மருமகள் கல்யாணி மதிவாணன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர். இவருக்கு ஜீவன் நெடுஞ்செழியன் (இந்திய டென்னிஸ் வீரர்) என்னும் பெயரனும், சொப்னா மதிவாணன் என்னும் பெயர்த்தியும் உள்ளனர். புகழ்பெற்ற பாராளுமன்ற உறுப்பினரான இரா. செழியன், இவர்தம் தம்பிகளுள் ஒருவர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்  தமிழிலக்கியத்தில் கலைமுதுவர் பட்டம் பெற்றவர். அங்கு இவரோடு பயின்றவர் பேராசிரியர் . அன்பழகன் அவர்கள். தமிழக அரசியல்வாதியும் இலக்கியவாதியும் திகழ்ந்தவர். தமிழகத்தின் கல்வி, நிதி அமைச்சராகப் பணியாற்றியவர். சிறிது காலம் பொறுப்பு முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்திலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் பொதுச்செயலாளராகவும், நிதியமைச்சராகவும் இருந்த பெருமைக்குரியவர்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் இவருக்குநாவலர்என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே அழைக்கப்படுகின்றார். தந்தை பெரியாரின் பகுத்தறிவு மாணவனாகவும், அறிஞர் அண்ணாவின் உற்ற நண்பராகவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் திகழ்ந்தவர்.

திருக்குறளும் மனுதர்மமும் எனும் தலைப்பில் சிறப்பானதொரு கட்டுரையை எழுதியுள்ளார். திருக்குறளுக்குத் தெளிவுரை எழுதியுள்ளார். ‘வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும்எனும் தன்வரலாற்று நூலை எழுதியவர்.

மாலைமணி நாளிதழில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார். மன்றம் என்ற மாதம் இருமுறை இதழை 1-5-1953ஆம் நாள் தொடங்கினார். திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட நம்நாடு இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

நாவலரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2021 திசம்பர் 26 அன்று சென்னைசேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் நெடுஞ்செழியனின் மார்பளவு சிலையைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். மேலும் இரா. நெடுஞ்செழியனின் நூல்களை நாட்டுடைமையாக்கி அதற்கான நூலுரிமைத் தொகையாக அவரின் வாரிசுகளுக்கு 25 இலட்சம் வழங்கினார். நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் 12-01- 2000 அன்று இயற்கை  எய்தினார்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995