Skip to content

திருக்குறள் அறிஞர்கள் அறிவோம் கிருபானந்த வாரியார் 

திருமுருக கிருபானந்த வாரியார்

இன்று வாரியார் சுவாமிகள் நினைவு நாள் 

திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகஸ்ட் 25, 1906 – நவம்பர் 7, 1993)
 நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். “அருள்மொழி அரசு”, என்றும் “திருப்புகழ் ஜோதி” என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.
“வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள்” என்ற  நூலில்  வா.வேங்கடராமனின் அருட்செல்வர் கிருபானந்த வாரியாரின் திருக்குறள் தொண்டு – ஒரு கண்ணோட்டம் என்னும் கட்டுரை நான்காவதாக இடம் பெற்றுள்ளது.
வாரியாரின் பிறப்பு வளர்ப்பு பணிகளைக் குறிப்பிடும் கட்டுரையாளர் கி.வா.ஜ. அவரை 64 ஆவது நாயன்மார் எனப் புகழாரம் சூட்டியதன் பொருத்தத்தை விளக்குகிறார்.
பன்னிரு திருமுறைகள், சைவக்காப்பியங்கள், சைவச்சித்தாந்தச் சாத்திரங்கள் எனச் சைவ நூற்புலமை மிகக் கொண்டிருந்த வாரியார், சைவக் கருத்துகளைக் கூறும் இடங்களில் எல்லாம் திருக்குறள் மேற்கோளைத் தவறாமல் கையாண்டுள்ளார் என்கிறார் கட்டுரையாளர்.
நம் நாட்டில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்று சைவப்பரப்புரை மேற்கொண்டவர் வாரியார். அவ்வாறு தாம் சென்ற எல்லா இடங்களிலும் திருக்குறள் பரப்புரையும் மேற்கொண்டு திருக்குறள் தொண்டராக வாழ்ந்துள்ளார் என்பதை நமக்குக் காட்டுகிறார் கட்டுரையாளர்.
வாரியார், திருக்குறள் சைவநூலா?, திருக்குறள் கதைகள் முதலான திருக்குறள் தொடர்பான நூல்களையும் திருக்குறள் கதைகள், வாரியாரின் வள்ளுவர் ஆகிய திருக்குறள் தொடர்பான ஒலிப்பேழைகளையும் வெளியிட்டுள்ளதைக் குறிப்பிட்டு வாரியாரின் திருக்குறள் பரப்புரையை விளக்குகிறார்.
வாரியாரின் 40இற்கு மேற்பட்ட நூல் பட்டியலையும் 25 பணிகளையும் குறிப்பிடும் கட்டுரையாளர் வாரியார் குறள்நெறிப்படி வாழ்ந்தவர் எனப் பாராட்டுகிறார்.
திருவள்ளுவர் கூறியவாறு வினையால் வினையாக்கிக்கோடும் சிறப்புடன் சைவப்பரப்புரைப் பொழிவால் திருக்குறள் பரப்புரைப் பொழிவை மேற்கொண்ட திருக்குறள் பரப்பாளர் வாரியார் என வா.வேங்கடராமன் கட்டுரையை நன்கு முடித்துள்ளார்
 நன்றிwww.akaramuthala.in