அ. சக்கரவர்த்தி நயினார் (17.05.1880 – 12.02.1960)
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திற்கு அருகில் உள்ள வீடூரில் அப்பாசாமி நயினார் அச்சம்மையாருக்கு மகனாகத் தோன்றினார். சென்னை ராயப்பேட்டை வெஸ்லி உயர்நிலைப்பள்ளி, கிறித்துவக் கல்லூரியில் பயின்று பி.ஏ., எம்.ஏ., எல்.டி., பட்டங்களைப் பெற்று மில்லர் தங்கப் பதக்கமும் பெற்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் தத்துவத்துறைப் பேராசிரியராக (1933 – 1936) உயர்ந்தார். 1938இல் ராவ் சாகிப் பட்டம் பெற்றார்.
தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மிகு புலமை பெற்றவர். சமண சமயக் கருத்துக்களையும் தமிழ் சமணச் சமய நூல்களையும் ஆங்கிலத்தில் எடுத்துரைத்தும் எழுதியும் வந்தார். திருக்குறளுக்கு ஆங்கிலத்தில் உரை எழுதினார். பஞ்சாததிகாயம், சமயசாரம் ஆகிய வடநூற்களுக்கு ஆங்கிலத்தில் விளக்க உரை எழுதினார்.
திருக்குறள் சைனகவிராய பண்டிதர் உரை, நீலகேசி சமய திவாகர முனிவர் உரை, மேருமந்திர புராண உரை ஆகிய நூல்களைப் பதிப்பித்தார். சைவசித்தாந்தத்தில் நுண்மாண் நுழைபுலம் உடையவர். இந்திய சமண சமயத் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர்.
தமிழ்த்துறை சாராத ஒருவர்; தத்துவத் துறையில் பணியாற்றியவர்; திருக்குறளையும் சமணத் தமிழ் இலக்கியங்களையும் வட இந்தியரும் அயல் நாட்டினரும் அறிந்து கொள்ளும் வண்ணம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தும் பல கருத்தரங்குகளில் உரையாற்றியும் தமிழின் பெருமையை நிலைநாட்டிய அறிஞர்.