அவ்வை சு.துரைசாமிப்பிள்ளை (05.09.1902 – 03.04.1981)
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் அவ்வையார் குப்பத்தில் பிறந்தவர். வள்ளலார் மரபில் சுந்தரம்பிள்ளை சந்திரமதி இணையருக்கு ஐந்தாவது மகவாகத் தோன்றினார். கரந்தைப் புலவர் கல்லூரியில் பயின்று 1930இல் வித்துவான் பட்டம் பெற்றார். காவேரிப்பாக்கம், செங்கம், செய்யாறு, போளூர் ஆகிய ஊர்களில் பணியாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை தியாகராயர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து 1968இல் பணி நிறைவு பெற்றார்.
இவர் செய்யாறில் தமிழாசிரியராகப் பணியாற்றியபோது பேரறிஞர் அண்ணா அவர்கள் காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு வந்து புலவர் கா. கோவிந்தன் அவர்களையும் உடன் அழைத்துக் கொண்டு சென்று இவருடன் தமிழ்க் கலந்துரையாடலில் ஈடுபடுவது உண்டு. இவருடைய மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் புலவர் கா. கோவிந்தன், தியாகராசர், திருமதி டாக்டர் இராதா, கவிஞர் மீரா (மீ. ராசேந்திரன்) ஆகியோர்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகியோரோடு நெருக்கமாக இருந்தவர். செந்தமிழில் கனிவும் கம்பீரமும் ஆற்றொழுகப் பேசும் நாவீறு மிக்கவர்.
சைவத்தில் மிகப்பழமை மிக்கவர். இருப்பினும் முற்போக்கான சிந்தனையும் பகுத்தறிவுப் பார்வையும் மிக்கவர்.
புறநானூறு, பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, நற்றிணை, சிவஞானபோதம், ஞானாமிர்தம், திருவருட்பா ஆகிய நூல்களுக்கு விரிவான உரை கண்டவர். இவர் வள்ளலாரின் திருவருட்பாவிற்கு எழுதிய உரையினை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பத்து தொகுதிகளாக வெளியிட்டது. தற்போது வர்த்தமானன் பதிப்பகத்தார் 10 தொகுதிகளை வெளியிட்டு உள்ளனர். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களுக்கும் உரை எழுதியுள்ளார். தமிழ்த் தாமரை, கோமகள் கண்ணகி, சைவத்திறவு, சைவ இலக்கிய வரலாறு முதலான முப்பத்து நான்கு நூல்களைத் தமிழுக்கு அளித்த பெருந்தகை.
இவர் ஏடு படிக்கும் பாங்கினைக் கண்ட தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்கள் நீங்களும் தமிழ் நூல்களைப் பதிப்பிக்கலாம் எனப் பாராட்டி ஊக்குவித்தார். ‘உரைவேந்தர்’ எனப் போற்றப் பெறும் இவர் ஒரு நாளைக்கு 100 – 200 பாக்கள் வரை உரை வரையும் ஆற்றலாளர்.
இவரது ஒன்பது மக்களில் ஐவர் ஆண்கள், நால்வர் பெண்கள். நாவலர் டாக்டர் அவ்வை நடராசனார் அவர்களும் பேராசிரியர் து.ஞானசம்பந்தன் அவர்களும் குறிப்பிடத்தக்கவர்களாவர். இவருடைய மருமகன் பேராசிரியர் டாக்டர் இரா.குமரவேல் அவர்களிடம் பச்சையப்பன் கல்லூரியில் ஐந்து ஆண்டுகள் தமிழ் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
உரைவேந்தர், பேரவைச் செம்மல், சித்தாந்த கலாநிதி, தண்டமிழுக்கு வள்ளல், தனியாண்மைச் செம்மல், கலைமாமணி ஆகிய விருதுகளைப் பெற்றவர்.