அய்யா தி.சு. அவிநாசிலிங்கம் செட்டியார் (1903)
திருமதி பழனியம்மாள் திரு. சுப்பையா செட்டியார் இணையருக்கு 05.05.1903 அன்று திருப்பூரில் பிறந்தார். இவர் ஒரு வழக்கறிஞர். நாட்டுக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். இராமகிருஷ்ண மடத்துடனான தொடர்புக்குப் பிறகு சுவாமி சித்பவானந்தரின் அன்பால் ஆன்மிக உணர்வை வளர்த்துக் கொண்டார்.
காந்தியடிகளின் கொள்கைகளில் ஈர்ப்பு ஏற்பட்டது. 03.04.1930 அன்று அனாதைகள், ஏழைகளுக்காகக் கல்வி நிறுவனம் தொடங்கினார். பல எதிர்ப்புகளுக்கிடையே முதல்மாணவராகத் தாழ்த்தப்பட்டவர்களாகக் கூறப்படும் இனத்தைச் சேர்ந்தவரை சேர்த்தார். விடுதலைப் போராட்டத்தில் நான்கு முறை சிறை சென்றவர். 5 ஆண்டுகளுக்குமேல் சிறையில் இருந்தவர்.
பெரியநாயக்கன் பாளையத்தில் 10க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி, தொழிற் கல்வி நிறுவனங்கள் நிறுவினார். விடுதலைக்கு முன்னும் பின்னும் என இரண்டு முறை கல்வி அமைச்சராக இருந்தார். பெரியசாமித்தூரன் அவர்களைக் கொண்டு தமிழில் கலைக்களஞ்சியம் பத்துத் தொகுதிகளையும் சிறுவர் கலைக்களஞ்சியம் பத்துத் தொகுதிகளையும் வெளியிட்டார்.
கல்வி அமைச்சராக இருந்தபோது திருக்குறளைப் பாடத்திட்டம் ஆக்கினார். 1950களில் கி.வா.ஜ.வைக் கொண்டு திருக்குறள் ஆராய்ச்சி நூல்களைப் பதிப்பித்தார். தமிழ் வளர்ச்சிக்கழகம் என்ற அமைப்பினை நிறுவி தமிழில் பல்துறை நூல்கள் வெளிவர துணை நின்றார். இன்றும் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இந்நிறுவனம் செயல்படுகிறது. இவர் மாணவர்களின் நலன் கருதி அன்பின் ஆற்றல் முதலான கட்டுரை நூல்கள் எழுதியுள்ளார் ஆங்கிலத்திலும் இவரது நூல்கள் வெளிவந்துள்ளன.