Skip to content

அயோத்திதாச பண்டிதர்

அயோத்திதாச பண்டிதர் (20.05.1845 – 05.05.1914)

பண்டிதர் அயோத்திதாசர் சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியில் பிறந்து தந்தையார் பணிபுரிந்த நீலகிரி மாவட்டத்தில் வளர்ந்தவர். இவர் இயற்பெயர் காத்தவராயன். தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி. சமூக சேவகர், தமிழறிஞர், சித்தமருத்துவர், திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் ஒருவர் எனப் பன்முகம் கொண்டவர். சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் இவருடைய காலத்தவர். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆதி திராவிட மக்களின் முன்னேற்றத்திற்காக அரசியல், சமயம், இலக்கியம் ஆகிய தளங்களில் தீவிரமாகச் செயல்பட்டவர். 1891 இல் இரட்டை மலை சீனிவாசன் அவர்களோடு இணைந்து பஞ்சமர் மகாஜன சபையைத் தோற்றுவித்தவர்.

கல்விப்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தாத்தா பட்லர் கந்தப்பன் அவர்கள் திருக்குறள் ஏடுகளைத் தம் குடும்ப சேமிப்பிலிருந்து எல்லீஸிடம் கொண்டு வந்து கொடுத்தார் என்பர். அந்த ஏடுகளைக் கொண்டு எல்லீஸார் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் என்பர்.

தமிழ், ஆங்கிலம், வடமொழி, பாலி ஆகிய மொழிகளில் புலமை உடையவர். தம் குருவின் மீது கொண்ட மதிப்பால் காத்தவராயன் என்ற தம் பெயரைஅயோத்திதாசர்என்று மாற்றிக் கொண்டார். பிறப்பால் வைணவராக இருந்தாலும் பௌத்தத்திற்கு மாறினார். தன்னைப் பின்பற்றும் அனைவரையும் பௌத்தத்திற்கு மதம் மாற்றினார். 25 நூல்கள் எழுதியுள்ளார். திருக்குறளுக்கு உரை எழுதி வந்தார். அவர் மறையவே அந்த உரை முற்றுப் பெறாமலேயே 55 அதிகாரங்களுடன் நின்றுவிட்டது. ஒரு பைசா தமிழன் (1907 – 1914) இதழை நடத்தினார்.

தமிழ் இலக்கியங்கள் திரிபீடகத்தின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை என்ற கருத்துடையவர். திரிபீடகத்தின் வழி நூலாகிய திரிக்குறள், அதன் சார்பு நூல்களாகிய திரிமந்திரம், திரிவாசகம், சித்தர் பாடல்கள் என எழுதியவர்.

நன்றி
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
தொகுப்பாசிரியர்
திருக்குறள் கலைக் களஞ்சியம் (10  தொகுதிகள்- 5000 பக்கங்களுக்கு மேல் )
வர்த்தமானன் பதிப்பகம்
சென்னை
Vardhaman Pathippagam
044-28144995